உறவுக்கார குழந்தை ஒன்று உங்கள் வீட்டுக்கு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தை உங்கள் வீட்டிலுள்ள பொம்மை அல்லது சாதாரண ரப்பர் பந்து என ஏதோவொரு பொருளை கையில் எடுத்து விளையாட வாய்ப்புள்ளது. குழந்தை தன் வீட்டுக்குப் புறப்படும் நேரம் வரும்போது, வாஞ்சையுடன் தன் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் அந்தப் பொருளை அப்படியே எடுத்துச் செல்ல அனுமதிப்பீர்களா? அல்லது அந்தப் பொருளை வாங்கிக்கொண்டு குழந்தையை சமாதானம் சொல்லி வழியனுப்புவீர்களா?
`பொதுவாக நம்மில் பலருக்கும் குழந்தைகளின் முகத்தில் வருத்தத்தையோ, ஏக்கத்தையோ பார்க்கப் பிடிக்காது. அவர்கள் விரும்பி விளையாடும் பொருளை கையோடு கொடுத்து வழியனுப்பி வைப்பதே நிறைவளிக்கும். ஆனால், இந்தச் செயல் பின்னாளில் குழந்தைகளின் குணாதிசயத்தில் மிகமுக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தலாம்' என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.
என்னமாதிரியான மாற்றம் அது?
``தன்னை ஈர்த்த ஒரு பொருளைப் பயன்படுத்துவதன்மூலம், அந்தப் பொருள் யாருடையதாக இருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் தனக்குரியதாக ஆக்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் குழந்தைக்கு வந்துவிடும். முதல் சில நாள்கள், அதை நடைமுறைப்படுத்திப் பார்ப்பார்கள். அதில் வெற்றி கண்டுவிட்டால், அதைத் தொடர்ச்சியான ஒரு பழக்கமாக்கிக் கொள்வார்கள். தான் விரும்பிய பொருள் தொடர்ச்சியாகக் கிடைக்கும்பட்சத்தில், ஒரு கட்டத்துக்குமேல் `நமக்குப் பிடித்த பொருளாக இருந்தால், அது நிச்சயம் நமக்கானதுதான். அதை நாமே எடுத்துக்கொள்ளலாம்' என்று நினைக்கத் தொடங்குவர். இதனால், அனுமதியில்லாமல் அடுத்தவர் பொருளை எடுக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடும்.
குழந்தைகள், எழுதப்படாத காகிதத்தைப் போன்றவர்கள் என்பதைப் பெற்றோர் உணரவேண்டும். அந்தக் காகிதத்தில் நீங்கள் எதை எழுதுகிறீர்களோ, அது எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே அச்சடிக்கப்பட்டுவிடும். `குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுவார்கள்' என்றொரு திரைப்பட வசனம் உண்டு. குழந்தைகளின் அனைத்துச் செயல்களுக்கும், இது பொருந்தும். குழந்தையின் ஒவ்வொரு செயலையும் முறையாகக் கண்காணித்து அதில் சரி எது, தவறு எது என்பதை எடுத்துரைப்பதுதான் பெற்றோரின் கடமை. குழந்தைகள் பல்வேறுபட்ட மனிதர்களைத் தினம் தினம் பார்க்கின்றனர். யார் நல்லவர், யார் கெட்டவர், யாருடைய பழக்கம் சரியானது, எது தவறான பழக்கவழக்கம் என்பதை சுயமாக யோசித்துப் புரிந்துகொள்ளும் திறன் எந்தக் குழந்தைக்கும் இருக்காது. சிறுவயது முதல் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, நன்மை தீமைகளை பெற்றோர் எடுத்துரைத்தால் மட்டுமே பின்னாளில் அது சாத்தியப்படும்.
`குழந்தைப் பருவத்தில் அவனுடன் நான் நேரம் செலவிடமுடியவில்லை. இப்போது அவனுக்கு இந்தப் பழக்கம் அதிகரித்துவிட்டது' எனச் சில பெற்றோர் வருத்தப்படுவதுண்டு. அப்படிப்பட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவது நிச்சயமாக சவாலான காரியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், அது இயலாத காரியம் அல்ல. எளிமையாக எடுத்துரைத்தால் எந்தவொரு விஷயத்தையும் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்வார்கள். எனவே, இப்படிப்பட்ட குழந்தைகளிடம் பெற்றோர் நிதானமாகச் செயல்படவேண்டும்.
குழந்தை இன்னொருவரின் பொருளை எடுத்து வந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டதும் பல பெற்றோர் வன்முறையைக் கையில் எடுப்பார்கள். `இந்த வயசுலயே திருடுறியா நீ?' எனக் குழந்தையின் மனம் நோகும்படி பேசுவார்கள். இத்தகைய வார்த்தை வன்முறைகள், குழந்தைகளை நேரடியாகக் காயப்படுத்தும். தனது அறியாமையால் செய்த ஒரு செயலுக்காக வன்முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தை, வருங்காலத்தில் இரண்டுவிதமாக மாற்றமடையும். ஒன்று, `தான் கெட்டவன்' என நினைத்து தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகலாம். மற்றொன்று, `பெற்றோருக்குத் தெரியாமல் தவறிழைப்பது எப்படி' எனத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வாய்ப்பு உள்ளது. இரண்டுமே, அவர்களது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இதுமட்டுமன்றி, பெரும்பாலான நேரங்களில் அடுத்தவர் பொருளை அவர்கள் அனுமதியின்றி குழந்தை கொண்டுவந்து விடுகிறது என்பதை, எந்தப் பெற்றோரும் தாமாகக் கண்டறிவதில்லை.
ஆசிரியரோ, உடன் படிக்கும் மாணவனின் பெற்றோரோ, குழந்தையின் வேறொரு நண்பனோ சொல்லித்தான் `தங்களின் பிள்ளைக்கு இப்படியொரு தவறான பழக்கம் இருக்கிறது' என்பது பலருக்கும் தெரிகிறது. குழந்தைகளின் எல்லாப் பழக்கத்துக்கும், ஏதோவோர் இடத்தில் பெற்றோரும் காரணமாக இருக்கிறார்கள். எனவே, குழந்தையை மட்டுமே குறை கூறாமல், அவர்களைக் குற்றவாளிபோல நடத்தாமல், இலகுவாக அணுகவேண்டும். அடுத்தவர் பொருளை அனுமதியின்றி எடுத்துக்கொண்டு வந்தால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்; அதனால் உனக்கு (குழந்தைக்கு) என்னென்ன பிரச்னைகள் வரும்', `அடுத்தவர் பொருளை எடுத்துக்கொண்டு வருவது ஏன் தவறு என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். மேலும், மற்றவரின் பொருளை எந்தச் சூழலிலும் எடுக்கக் கூடாது என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். `ஒருவேளை உனக்கு அந்தப் பொருள் வேண்டுமென்றால், எங்களிடம் கேள். நாங்கள் உனக்கு வாங்கித்தருகிறோம்' என்று சொல்லலாம். ஒருவேளை அந்தப் பொருளை உங்களால் வாங்க முடியாது என்றால், அதைக் குழந்தைக்குப் புரிய வையுங்கள். `உங்களால் எதை வாங்கிக்கொடுக்க முடியும்', `எதை வாங்கித் தரமுடியாது' என்பதைக் குழந்தை தெரிந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
பெரும்பாலான குழந்தைகள், எல்லோருடைய கவனமும் தன்மீது படவேண்டும் (Attention Seeking) என்ற நோக்கத்தில், அடுத்தவர் பொருளை எடுத்து ஒழித்து வைப்பார்கள். சில நேரங்களில் ஏதேனும் பழைய சண்டையை மனதில் வைத்து, பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படுவர். இன்னும் சில குழந்தைகள், காரணமே இல்லாமல் `ஏதோ ஒரு பொருள் இங்கு இருக்கிறதே' என நினைத்துக்கொண்டு அதைக் கையில் எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். இவை அனைத்துமே, அவர்கள் அறியாமையால் செய்யும் செயல்கள் என்பதால், பெற்றோரும் ஆசிரியரும் அவர்களுக்கு நல்லது, கெட்டது குறித்து விளக்கிச் சொல்லி அவர்களை நெறிப்படுத்தவேண்டும். எந்தச் சூழலிலும் அவர்களைக் குற்றவாளியாக்க வேண்டாம்.
`என் குழந்தை எந்தப் பொருளையும் எடுத்துட்டு வரமாட்டான். ஆனா, எல்லாத்தையும் கொடுத்துட்டு வந்துடுவான்' என்பார்கள் சில பெற்றோர். ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், பொருள்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது இயல்பு. குழந்தைகளைப் பொறுத்தவரை, அது ஆச்சர்யமூட்டும் ஈர்ப்புசக்தி கொண்ட ஏதோவொரு பொருள், அவ்வளவுதான். பெற்றோருக்கு அப்படியல்ல. ஒவ்வொரு பொருளின் விலையையும் கணக்கில் கொண்டே, பெற்றோர் செயல்படுவர். அதிலும் தவறும் இல்லை. அப்படியென்றால், என்னதான் செய்வது? குழந்தைகளுக்குப் பொருள்களின் விலையைச் சொல்லிக் கொடுக்கலாமா என்றால், நிச்சயமாக சொல்லித் தரலாம். ஆனால், அதன்பிறகு அந்தப் பொருளை வீட்டில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள். காரணம், சமநிலையைப் போதிப்பதற்காகத்தான் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
ஒரே சீருடை, ஒரே புத்தகம், ஒரே கல்வி எனப் பள்ளியில் அனைத்துமே சமமாக இருக்க வேண்டியது அவசியம். பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தையும், ஒரே மாதிரியான பொருளாதாரச் சூழலிலிருந்து வருவதில்லை. உங்கள் குழந்தைக்குக் கிடைத்த விலைஉயர்ந்த, ஈர்ப்பு சக்தி கொண்ட அந்த `ஃபேன்சி' பொருள், எல்லாக் குழந்தைக்கும் கிடைத்துவிடாது. உங்கள் குழந்தை வைத்திருக்கும் அந்தப் பொருளைப் பார்த்து, மற்ற குழந்தைகள் ஏக்கமடைவார்கள். அவர்களுக்கு அதன்மீது ஆசை அதிகரிப்பதுடன், அந்தப் பொருள் வேண்டும் என்று தங்களது பெற்றோரிடம் கேட்பார்கள். கிடைக்காதபட்சத்தில், அதை மற்ற குழந்தையிடம் கேட்டுப்பெறுவார்கள். அப்படியும் கிடைக்கவில்லையென்றால், தாமாகவே எடுத்துக்கொள்ளத் தொடங்குவர். ஃபேன்சி பொருள்கள் மீதான ஈர்ப்புதான் இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம்.
இத்தகைய சூழலில், இதுபோன்று மற்ற குழந்தைகளுடன் வளரும் உங்கள் குழந்தைக்கும் தன்னைப்பற்றிய மாய பிம்பம் ஒன்று ஏற்படலாம். `நான்தான், நான் மட்டும்தான், இது எனக்கான பொருள்' என அவர்களுக்குள் உள்ள `தான்' என்ற தன்மை அதிகரிக்கலாம். இது, அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. எனவே, பெற்றோரே... ஃபேன்சி பொருள் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை உங்கள் குழந்தைகளிடம் பள்ளிக்குக் கொடுத்து அனுப்பவேண்டாம்" என்கிறார் பூங்கொடி பாலா.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U