பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
உரை :
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
பழமொழி :
A snake could make an army panic
பாம்பென்றால் படையும் நடுங்கும்
பொன்மொழி:
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
- ஸ்டீலி .
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1..யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்
2..தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு
நீதிக்கதை :
குரங்கும் இரண்டு பூனைகளும்
(The Monkey and the Two Cats Moral Story)
ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தன. அந்த ரொட்டியை சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, ரொட்டி சரி சமமாக பிரிக்க பட வேண்டும் என்று மற்ற பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.
இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று ரொட்டியை பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.
அதனால் இரண்டு பூனைகளும், ரொட்டியை பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், ரொட்டியை சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது. ரொட்டியை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது.
தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த ரொட்டி துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது.
அந்தத் தட்டிலிருந்த ரொட்டியை குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி ரொட்டித் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.
இப்படியே ரொட்டி குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள ரொட்டியை தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள ரொட்டி, தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது. பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.
நீதி: பொறாமை இருந்தால் உள்ளதையும் இழக்க நேரிடும்.
இன்றைய செய்தி துளிகள் :
1.தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்வு: தமிழக அரசு
2.60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ வங்கி தகவல்
3.வெளிநாடு தப்பும் கடனாளிகளைத் தண்டிக்க மாநிலங்களவையில் சட்டம் நிறைவேற்றம்
4.நாளை இந்த ஆண்டின் 2-வது முழு சந்திரகிரகணம்!
5.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.