ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகையை மாநில அரசே முழுமையாக ஏற்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையை வழங்கும் திட்டம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தக்கூடிய திட்டமாகும்.
2010 ஜூலை முதல் தனியார் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவர்களும் கல்வி உதவித் தொகையைப் பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
2012-13-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்துக்கான தமிழக அரசின் பொறுப்பு நிதியாக ரூ. 353.55 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேல் இந்தத் திட்டத்துக்காகச் செலவிடப்படும் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
2016-17-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்துக்கான மாநிலத்தின் நிதி ரூ.1,526.46 கோடியாக உயர்ந்தது. இதில் தமிழகத்தின் பொறுப்பு நிதி போக மத்திய அரசு தர வேண்டிய நிதி முழுமையாகத் திரும்ப வழங்கவில்லை. அதனால் ஆண்டுதோறும் நிலுவைத் தொகை உயர்ந்துகொண்டே வந்தது.kaninikkalvi
31,000 மாணவர்களுக்கு பாதிப்பு: இந்த நிலையில் 2018 ஏப்ரலில் மத்திய அரசு இந்தத் திட்டத்தில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயின்று வரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கி வந்த உயர் கல்வி சலுகையை ரத்து செய்தது.
இதனால், தனியார் சுயநிதி கல்லூரி நிறுவனங்களின் நிர்வாக ஒதுக்கீட்டில் கல்வி பயில ஆண்டுதோறும் புதியதாக பொறியியல் போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேரும் 31,000 மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறத் தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
எனினும், ஏற்கெனவே பயன்பெற்று வரும் இரண்டாம் ஆண்டும், அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்தக் கல்விச் சலுகை தொடர்ந்து கிடைக்கும். 2018-19-ஆம் ஆண்டில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் புதிதாகச் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்தக் கல்விச் சலுகை கிடைக்காது.
Kaninikkalvi.blogspot.com
ரூ. 850 கோடி விடுவிப்பு: எனவே, 2017-18-ஆம் ஆண்டுக்கான முதலாண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு உதவித் தொகை, கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய நிர்வாகக் கட்டணம் தவிர மற்ற அனைத்து உதவித் தொகைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை உடனடியாக வழங்க தமிழக அரசு தற்போது ரூ. 850 கோடியை விடுவித்துள்ளது. அதேசமயம், 2017-18-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மீதமுள்ள பராமரிப்பு உதவித் தொகையை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு இதற்கான நிதியை முழுமையாக விடுவிக்கவில்லை என்றாலும், மாநில அரசு அதன் நிதியிலிருந்து இந்தத் தொகையை விடுவித்து வருகிறது. 2018-19-ஆம் ஆண்டுக்கான சேர்க்கை முடிவுற்ற பின்பு கல்வி உதவிக்கான கேட்பு கணக்கிடப்பட்டு, அதற்கான உதவித் தொகையையும் மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி மாநில அரசின் பொறுப்பு நிதி ரூ.1,526.46 கோடியாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்தத் திட்டத்தின் மொத்த கேட்பு 2018-19-ஆம் ஆண்டில் ரூ.1,526.46 கோடிக்கு மேல் உயர வாய்ப்பில்லை. அதனால், மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கான முழு நிதியையும் இனிமேல் மாநில அரசு அதன் நிதி ஆதாரத்திலிருந்தே வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி, இந்த நிதிச் சுமையை மாநில அரசே தொடர்ந்து ஏற்றுச் செயல்படுத்தும் என்றார்.
விசாரணை நடைபெறுகிறது: மேலும், சில கல்வி நிறுவனங்கள் அரசு ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களை அதிக உதவி பெறும் நோக்குடன் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்து அதிக உதவி பெற்றது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.