தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அரசியல் கட்சியினர், படிப்பில் சிறந்துவிளங்கும் 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விக்நயா உள்ளிட்ட 7 பேர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையின்போது தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் போலியான இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து சேர்க்கை பெற்றுள்ளனர். இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழக மாணவர்களுக்கே தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும். தரவரிசைப் பட்டியலையும் ரத்து செய்து புதிதாக வெளியிட வேண்டும்எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், பிற மாநிலங்களிலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளனரா என்பது தொடர்பாகமத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி என்.கிருபாகரன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்காக நடப்பாண்டில் 1250-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எத்தனை பேர் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரங்கள்எதுவும் இல்லை.இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தால் தமிழக மாணவர்களின் உரிமை பறிபோகின்றது. எனவே மத்திய அரசு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரியைச் சேர்ந்தஎத்தனை மாணவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
தற்போது எத்தனை பேர் பிற மாநிலங்களில் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், நீட் தேர்வால் இடம் கிடைக்காத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், இடம் கிடைத்தும் கட்டணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர்கள் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அரசியல் கட்சியனர், படிப்பில் சிறந்து விளங்கும் 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.