2016ஆம் ஆண்டில் இந்தியக் கல்வித் துறையின் வருவாய் 9,780 கோடி டாலராக இருந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 2000ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்தியக் கல்வித் துறையில் 1,400 கோடி டாலர் மதிப்பிலான அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கல்வி அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்குள்ள 50,000க்கும் அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் 750 பல்கலைக்கழகங்களில் 3.33 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இனிவரும் காலங்களிலும் உயரும். இந்தியக் கல்விச் சந்தை 2020ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்ந்து 18,000 கோடி டாலராக இருக்கும். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கல்வி மற்றும் 6 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்களின் சேர்க்கையே இதற்குக் காரணமாகும்.
இந்தத் தரவுகள் மூலம் நாம் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதை உறுதி செய்ய முடியும். இருப்பினும், பராம்பரிய கற்பித்தல் முறைகள் மாணவர்களிடத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தாது. அதனால், வளர்ந்து வரும் நடைமுறைகள் மற்றும் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, மாணவர்களுக்குக் கற்பிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட திறமை
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனிப்பட்ட திறமை மற்றும் வித்தியாசமான விருப்பங்கள் மற்றும் கற்றல் முறைகள் இருக்கும். அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து, அதில் அவர்களை வலுவாக்க வேண்டிய முறைகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளுக்குமான தனிப்பட்ட திறமைகளில் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.
ஒருங்கிணைந்த கற்றல்
பாடங்களை ஒருங்கிணைந்த கற்றல் முறையில் கற்பிக்க வேண்டும். உதாரணமாக, சார்லி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை குறித்து ஆங்கிலத்தில் கற்பிக்கும்போது, கணிதம் மற்றும் வணிக சம்பந்தமாகவும் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். கற்பித்தல் முறைகளில், ஆசிரியர்கள் புது வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்
கல்வி இருவழிகளைக் கொண்டவை
இளமையான குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பது ஒரு கலை. வேடிக்கையுடனும், அழுத்தம் இல்லாமல் கற்கும் பாடங்கள் மாணவர்கள் மனதில் நிலைத்திருக்கும். குழந்தைகள் சிந்திக்கும் முறை தவறு என்று ஒருபோதும் ஆசிரியர் கூறக் கூடாது. மாறாக, ஆக்கப்பூர்வமான முறையில் நுண்ணறிவை வளர்க்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். வகுப்பறையில் ஆசிரியரும் மாணவர்களும் உரையாடுவதனால் பாடம் கற்கவும் கற்பிக்கப்படவும் வேண்டும். அப்போதுதான், கற்றல் ஆர்வத்துக்குரியதாக மாறும்.
விளையாட்டு மூலம் கற்றல்
விளையாட்டு மூலம் கற்றுக்கொள்வது என்பது மற்றொரு யுக்தியாகும். விளையாட்டின் உதவி மூலம் குழந்தைகள் பல்வேறு கருத்துகளைக் கற்றுக்கொள்ள முடியும். காலங்காலமாகப் பின்பற்றப்படும் மனப்பாட முறைக்குப் பதிலாக, வீடியோ கேம் மற்றும் இதர விளையாட்டுகளின் அம்சங்களைப் பயன்படுத்தி மாணவர்களை ஊக்கவிக்கலாம். மாணவர்களும் சிறப்பாகப் புரிந்து கொண்டு, தேர்வுகளில் நல்ல தேர்ச்சியைப் பெற முடியும். இதனால், மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும்.
டிஜிட்டல் வகுப்பறை
தொழில்நுட்ப வளர்ச்சியினால், இன்றைய வகுப்பறை டிஜிட்டல் மயமாகியுள்ளது. மாணவர்கள் இந்தியாவில் உட்கார்ந்துகொண்டு, அமெரிக்கப் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் நடக்கும் வகுப்புகளில் பங்கேற்க முடியும். காரணம், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கல்விமுறை தான். தரமான கல்வி என்பது இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான ஒன்று. அதை ஒவ்வொரு மாணவர்களும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.