சி.பி.ஓ.பி., சி.சி.ஐ.ஐ., சி.பி.பி., என்ற பெயர்களில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திவரும் தொலைநிலைக் கல்வித் திட்டங்களை ரத்து செய்வது என, ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மட்டுமே தொலைநிலைக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றும், அனுமதி பெறாத பாடங்களை நடத்தக் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தது.
ஆனாலும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வெளி மாநிலங்களில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ஏராளமான தொலைநிலைக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் அனுமதி இல்லாத பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த மையங்களால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில், மேற்கண்ட தொலைநிலைக் கல்வி மையங்களை நிரந்தரமாக மூடுவது என்றும் அதன்படி 2018-19ஆம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கையை நடத்துவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதேநேரம், தற்போது 2 -ஆம் ஆண்டு, 3 -ஆம் ஆண்டுகளில் படித்து வருபவர்கள் தங்களது படிப்பைத் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களை மூடுவதால் பல்கலைக்கழகத்துக்கு சுமார் ரூ.50 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரிகளில் தொலைநிலைக் கல்வித் திட்டத்தை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு அதற்காக சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இருப்பினும் கல்லூரி நிர்வாகிகள் இந்த விஷயத்தில் எந்தவித உறுதியான முடிவையும் தெரிவிக்காமல், யோசித்து பதிலளிப்பதாக கூறியுள்ளதாக, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், தனியார் கல்லூரி முதல்வர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு விவகாரம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், இதுதொடர்பான வழக்கில் இறுதி முடிவு எட்டப்படும் வரையிலும், பல்கலைக்கழகம் ஏற்கெனவே எடுத்த முடிவான 65 வயது என்பது தொடரட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல்கலைக் கழகத்தின் இந்த இரு முடிவுகளுக்கும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பசுபதி கூறியதாவது:
பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கல்வி வழங்க செயல்படுகின்றனவே தவிர வருவாய் ஈட்டுவதற்காக அல்ல.
எனவே, தனியாருடன் இணைந்து செயல்பட்டு வந்த தொலைநிலைக் கல்வி மையங்களை மூட எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
அதேநேரத்தில், வருவாய் இழப்பு ஏற்படும் என்பதற்காக இந்த மையங்களை கல்லூரிகளில் தொடங்கக் கூடாது.
இது காலப்போக்கில் கல்வித் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கல்வி நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடவும் வழிவகுக்கும்.
அதேபோல், கல்லூரி முதல்வர்கள் ஓய்வுபெறும் வயது 62 என்ற அரசாணைக்கு எதிராக, பாரதியார் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட முடிவே நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையிலும் தொடரும் என்று அரசின் முதன்மைச் செயலர் தலைமையிலான கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.
Search This Blog
Saturday, May 19, 2018
Comments:0
Home
EDUCATION
தனியாருடன் இணைந்து நடத்தப்படும் தொலைநிலைக் கல்வித் திட்டங்கள் ரத்து: பாரதியார் பல்கலை. முடிவு
தனியாருடன் இணைந்து நடத்தப்படும் தொலைநிலைக் கல்வித் திட்டங்கள் ரத்து: பாரதியார் பல்கலை. முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.