'அனைத்து வகை நுழைவு தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், 18 சதவீத, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' என, வரி ஆலோசனை ஆணையம் தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த, 'சிம்பிள் சுக்லா டுடோரியல்ஸ்' நிறுவனம், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்காக, மாணவர்களை தயார்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம், வரி ஆலோசனை ஆணையத்தின், மஹாராஷ்டிரா பிரிவில், மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், 'கல்வி மையங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்படுவதை போல, நுழைவு தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சேவைக்கும் விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த, வரி ஆலோசனை ஆணையம் அளித்த தீர்ப்பு: கல்வி மையங்கள், பாடத் திட்டங்களை போதித்து, மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ் வழங்குகின்றன.
ஆனால், நுழைவு தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், அதுபோல எந்தவொரு பிரத்யேக கல்வித் திட்டத்தையும் பயிற்றுவிப்பதில்லை; கல்விச் சான்றிதழும் வழங்குவதில்லை. அதனால், இந்த பயிற்சி மையங்களை, கல்வி மையங்களாக கருத முடியாது.
ஆகவே, நுழைவு தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களுக்கு, 18 சதவீத, ஜி.எஸ்.டி., பொருந்தும். அதில், விலக்கு அளிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய வரி திட்டத்தில், தனியார் டுடோரியல் நிறுவனங்களுக்கு, 15 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது.
இது, ஜி.எஸ்.டி.,யில், 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு, தலா, 9 சதவீதம் அளிக்கப்படுகிறது.
நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள், மாணவர்களிடம் வசூலிக்கும், ஜி.எஸ்.டி.,யில் பெரும் பகுதியை, உள்ளீட்டு வரிப் பயனாக திரும்பப் பெறலாம். அந்த பயனை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதனால், ஜி.எஸ்.டி.,யை காரணம் காட்டி, பயிற்சி கட்டணத்தை உயர்த்தக் கூடாது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.