பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.
தமிழக பாடத்திட்ட மாணவர்கள், தேசிய அளவிலான போட்டி தேர்வு களில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில், வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன. ஐ.ஐ.டி., நடத்தும், ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1 பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன.
அதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும், கோரிக்கை எழுந்தது. ஆனால், தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது, எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது.
வழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில், அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.
எனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும், வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.