நடப்பு கல்வியாண்டில் 3336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் பழனிசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 05, 2017

1 Comments

நடப்பு கல்வியாண்டில் 3336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் பழனிசாமி


நடப்பு கல்வியாண்டில் 3336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் பழனிசாமி

நடப்பு கல்வியாண்டில் 3336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ''ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, கல்வியின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும், அறிந்துள்ளதன் காரணமாகத்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு 2017-18-ஆம் ஆண்டிற்கு மட்டும் 26 ஆயிரத்து 932 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

Kaninikkalvi.blogspot.in
ஜெயலலிதா அரசு பதவியேற்ற மே 2011 முதல் இந்த கல்வி ஆண்டு வரை பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு 1 லட்சத்து 37 ஆயிரத்து 261 கோடி ரூபாயினை எட்டியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13.12.2012 அன்று மாணவ, மாணவியருக்கான நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், 'இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை அனைவரும் கற்கவேண்டும். கல்லாதவர்களே இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை ஆக்க வேண்டும்' என்று தனது லட்சியக் கனவினை தெரிவித்தார். இந்தப் பரந்த பாரதத் திருநாட்டில் தமிழகத்தை கல்வி கற்போரின் புகலிடமாகவும், கல்வியென்றாலே தமிழகம்தான் என்று புகழும் இடமாக மாற்றும் வகையில் இன்றைக்கு பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். 

இதன் காரணமாக ஜெயலலிதா அரசு பதவியேற்றதிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக 40,433 ஆசிரியர்களும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலமாக 15,169 பகுதி நேர ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அரசு தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் 3336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்கள் வெகுதொலைவு பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழகத்தில் இதுவரை 227 புதிய தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 116 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் பள்ளிச் சுற்றுச் சுவர்கள் போன்றவைகள் அமைப்பதற்கு நபார்டு திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் இவைகளின் வாயிலாக ரூபாய் 4 ஆயிரத்து 148 கோடி செலவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
Kaninikkalvi.blogspot.in 
 தமிழகத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் விளைவாக தொடக்க நிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 99.85 விழுக்காடாகவும், நடுநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 99.20 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற 26 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 723 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவுள்ளது. ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் 12,959 ஆசிரியர்கள், மாறுதல் பெற்று பயனடைந்துள்ளனர். 

இவையெல்லாம், ஜெயலலிதா வழியில் வந்த அரசு ஒரு திறந்த புத்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. பல்வேறு பணிகளின் காரணமாக பெரு நகரங்களுக்கு வருகை தரும் ஆசிரியர்கள் குறைந்த கட்டணத்தில் வசதியாகத் தங்குவதற்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாநகருக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் 19 லட்சத்து 59 ஆயிரத்து 599 மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களை இரண்டே நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,  2009-ன்படி 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினைச் சார்ந்த தகுதியான குழந்தைகளுக்கான சேர்க்கையில்,வெளிப்படைத் தன்மையினை உறுதிசெய்யும் வகையில் 2017-18 ஆண்டு முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறையினை அரசு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித மன அழுத்தமுமின்றி தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் மாணவர்களை தயார் செய்யும் வகையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளில் இல்லாதவகையில் மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரப்பட்டியல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது மாணவர்களிடையே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

இதனால் பெற்றோர்களின் மனச்சுமை குறைந்திருக்கிறது. பதினோறாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற மாற்றத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ளும் துணிவை மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படப்போகும் கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே, தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

1 comment:

  1. Tet pass panni cv verification complete pannavagalukku posting poduvangala?!!!

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews