சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் மாநிலம் முழுவதும் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் மாநிலம் முழுவதும் தடுத்து நிறுத்தி கைது செய்யும் ‘குதிரை பேர’ அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைக்கு, தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காவல்துறையை இதுபோன்ற ஜனநாயக ரீதியிலான அமைதிப் போராட்டங்களை அடக்குவதற்காக பயன்படுத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல் மிகவும் வேதனையளிக்கிறது. ‘பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்’ வழக்கமான நிர்வாக நடைமுறையை முதல்-அமைச்சர் மறந்து விட்டார் போல் தெரிகிறது. ஆட்சியில் நடக்கும் ‘ஊழல் பேரணியை’ தடுக்காமல், இதுபோன்ற ‘அமைதிப் பேரணிகளை’ தடுத்து நிறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
‘நிரந்தரத் தீர்வு’ காண்பதற்கு பதிலாக காவல் துறையை ஏவிவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக நடக்கும் இதுபோன்ற போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று முதல்-அமைச்சர் கனவு காண்பது ஆரோக்கியமான நிர்வாகத்திற்கு அழகல்ல என்பதோடு, முதல்- அமைச்சருக்கு அரசு ஊழியர்களுடன் கூட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விருப்பமில்லை என்பதும் தெரிய வருகிறது.
போராடும் யாரையும் பார்த்துப் பேசுவதற்கு அஞ்சும் முதல்-அமைச்சராக இருப்பதால்தான் ஹைட்ரோ கார்பன் போராட்டம், கதிராமங்கலம் போராட்டம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எல்லாம் தொடர்ந்து இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கின்றன.
மக்களின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் அரசு ஊழியர்கள்தான் மிக முக்கிய நிர்வாகத் தூண்களாக இருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உணர்ந்து, அரசு ஊழியர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, அவர்களை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அமைத்துள்ள கமிட்டி மற்றும் ஏழாவது ஊதியக்குழு பற்றிய கமிட்டி ஆகியவற்றை உடனடியாக அறிக்கை கொடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.