கவின்கலையில் முதுநிலை பட்டப்படிப்பு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 29, 2025

Comments:0

கவின்கலையில் முதுநிலை பட்டப்படிப்பு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு



கவின்கலையில் முதுநிலை பட்டப்படிப்பு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு Chief Minister M. K. Stalin announces postgraduate studies at Kavinkalai

''கவின்கலை பல்கலையில், புதிதாக கலை பாதுகாப்புப் பிரிவில், அடுத்த ஆண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலையின் மூன்றாவது பட்டமளிப்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. முதல்வரும், பல்கலை வேந்தருமான ஸ்டாலின், விழாவுக்கு தலைமை வகித்தார். நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

மேலும், 2023 - 24, 2024 - 25ம் கல்வியாண்டில், இசை, கலைகள், கவின்கலைகள் மற்றும் இதர படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, 1,372 மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கவுரவித்தார்.

பாகுபாடு இல்லை பின், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கு, நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவை கூட, நாங்கள் புறக்கணிக்கவில்லை. 2021ம் ஆண்டுக்கு பின், இந்த பல்கலையை இன்னும் செழுமையாக வளர்த்திருக்கிறோம். இதுதான், நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு. இது, எதிர்காலத்தில் நிச்சயமாக எப்போதும் தொடர வேண்டும். கடுமையான பணிச்சூழலில் இருக்கும் நமக்கு, ஓய்வு நேரத்தில் புது சிந்தனையை துாண்டக் கூடியதாக கலைகள் உள்ளன.

கலை வளர்க்கும் தமிழக அரசின் சார்பில், நான்கு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

*தமிழகத்தின் மரபு கலைகளான கிராமிய கலைகள், நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்தில் இருக்கும் வலையங்குளத்தில், கிராமிய கலைப்பயிற்சி பள்ளி அமைக்க, அரசின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்

*கவின்கலையில் புதிதாக கலை பாதுகாப்புப் பிரிவில், முதுநிலை பட்டப்படிப்பு, 2026-2027ம் கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும்

* இசை மற்றும் கவின் பல்கலை நிர்வாகத்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஊதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக, தற்போது வழங்கப்படும் 3 கோடி ரூபாய் மானிய தொகை, 5 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் *'நான் முதல்வன்' திறன் சார்ந்த படிப்புகள், இசை மற்றும் கவின்கலை பயின்று வரும் மாணவ - மாணவியர் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

சிந்தனை இப்போது ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக, பலரும் ஓவியங்கள், பாடல்கள், இசை என்று உருவாக்குகின்றனர். அதனால், நமக்கான வாய்ப்புகள் குறைந்து விடுமோ என, மாணவர்கள் கவலைப்படக் கூடாது.

எவ்வளவு தான், தொழில்நுட்பம் வளர்ந்தாலும், அதனால், மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

விழாவில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், செயலர் மணிவாசன், பல்கலை துணை வேந்தர் சவுமியா, பதிவாளர் பூமாலினி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முத்துகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews