11-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 'தமிழ் பாட கேள்வித்தாள் எப்படி? மாணவர்கள் கருத்து 11th standard public examination: How was the Tamil question paper? Students' opinion
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று (மார்ச் 5) முதல் மார்ச் 27ந் தேதி வரையில் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த பொதுத் தேர்வை 7,557 பள்ளிகளில் படித்த 3,89,423 மாணவர்களும், 4,28,946 மாணவிகளும், 4,755 தனித் தேர்வர்களும், 137 சிறைவாசிகள் என 8,23,261 பேர் 3,316 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.
அதனை கண்காணிக்க 44,236 அறைக் கண்காணிப்பாளர்களும், 4,470 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 64 ஆயிரத்து 293 மாணவர்கள் 242 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்கும் பணியில் 5,137 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக 310 சொல்வதை எழுதுபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல் நாளான இன்று மொழிப்பாடத்திற்கான தேர்வு தொடங்கியுள்ளது. மொழிப்பாடத்தில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், பிரெஞ்ச், கன்னடம், இந்தி ஆகிய பாடங்களுக்கு அரசுத் தேர்வுத்துறையால் தயார் செய்யப்பட்ட கேள்வித்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் பெரும்பான்மையானோர் தமிழ் மொழிப் பாட தேர்வு எழுதினர். சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கபட்டிருந்த தேர்வு மையத்தில், தமிழ் பாட தேர்வை 178 மாணவர்களும், தெலுங்கு மாெழியில் 3 மாணவர்களும், சமஸ்கிருதம் பாடத்தில் 14 மாணவர்களும் எழுதினர்.
பதினோராம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதே சமயம், ஒரு மதிப்பெண் வினாவில் மட்டுமே சில கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் கூறினர்.
அதே போல சமஸ்கிருத மொழி பாட தேர்வினை 14 மாணவர்கள் எழுதினர். அதில், ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், வாழ்க்கை நெறிகள் உள்ளிட்ட பாடங்கள் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றிருந்ததாகவும், தேர்வு எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
புகாருக்கு
மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன் பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.