அறிவோம் COBSE - இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைக்கும் COBSE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2024

Comments:0

அறிவோம் COBSE - இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைக்கும் COBSE



அறிவோம் COBSE

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைக்கும் 'காப்ஸ்' எனும் பள்ளிக் கல்வி வாரியங்களின் கவுன்சில், ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. பள்ளிகளின் கல்வி முறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால், 'காப்ஸ்' பல்வேறு கல்வி வாரியங்களில் கல்வித்தரத்தை ஒரே சீராக பராமரிக்க உதவுகிறது. முக்கியத்துவம்:

என்.சி.இ.ஆர்.டி., என்.ஐ.இ.பி.ஏ., மற்றும் என்.சி.டி.இ., ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு, பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், ஒருங்கிணைந்த தரநிலைகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மற்றும் பல்வேறு மாநில பள்ளி கல்வி வாரியங்களுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டு தரமான கல்வியை உறுதிசெய்வதோடு, ஒற்றுமையை உருவாக்க உதவுகிறது. கல்வித் துறையில் ஏற்பட்ட புதிய கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்களை மாநில வாரியங்களுக்கு பரிந்துரைக்கிறது. தேசிய அளவிலான கல்விசார் நிகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை மற்ற மாநிலங்களுக்கும் வழங்கும் ஒரு தகவல் மையமாக செயல்படுகிறது.

பிரதான பணிகள்:

*உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குதல்.

*தேர்வு முறைகளில் மாற்றம் அல்லது திருத்தங்கள் செய்ய ஆலோசனை வழங்குதல்.

*கல்வி வாரிய உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உதவிகள் மற்றும் சேவைகளை வழங்குதல்.

*பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் கற்பித்தல் முறை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

*பள்ளிகளில் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்களுக்கு ஏற்பாடு செய்தல்.

*பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

*பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பல்வேறு கல்வி வாரியங்களுடன் இணைப்புப் பாலமாக செயல்படுதல்.

*பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல். *பொருளாதார நெருக்கடியால் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்.

*சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல்.

*பள்ளிக் கல்வியில் குறுகிய கால சான்றிதழ் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளை நடத்துவதற்கு வாரியங்களுக்கு பரிந்துரை செய்தல்.

*கல்வித் திட்டங்கள், ஆவணப்படங்கள், குறும்படம் போன்றவற்றின் மூலம் கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்தல்.

*முக்கிய பாடப்பிரிவுகளுடன் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளை தொடங்க உறுப்பினர் வாரியங்களுக்கு உதவுதல்.

*பள்ளிகளில், ஆரம்பநிலை முதல் உயர்நிலை வரை நல்ல தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் போலி பள்ளிகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்வி வாரியங்களுக்கு உதவுதல்.

மேலும், இந்தியாவில், வழக்கமான பள்ளிக் கல்வி கிடைக்காத எல்லைப் பகுதிகள், மலைப்பகுதிகள், குக்கிராமங்கள் போன்ற இடங்களில் பள்ளிகள் அமைத்து, அனைத்து குழந்தைகளும் கல்வி பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

விபரங்களுக்கு: www.cobse.org.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews