கலை, அறிவியல் கல்லூரி - இந்தாண்டும் நிரம்பிய பி.காம் இடங்கள்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டும் பி.காம் பாடப்பிரிவுகள் முழுமையாக நிரம்பின. தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரிகளில், பி.எஸ்.சி., பி.ஏ., பி.காம் பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி மே 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர். இதில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவிகள் நேற்று நேரில் சென்று விண்ணப்பிக்க ஏதுவாக அந்தந்த கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் தரவரிசை பட்டியல், மே 24ம் தேதி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மே 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. வழக்கம்போல இந்த ஆண்டும் பி.காம். படிப்பிற்கே முதலிடம் கிடைத்துள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியை பொருத்தவரை மொத்தம் ஆயிரத்து 484 இடங்கள் உள்ளன. இவற்றில் சிறப்புக் கலந்தாய்வில் மற்றும் முதற் கட்ட பொதுக்கலந்தவு ஆகியவற்றினை சேர்த்து மொத்தம் 423 இடங்கள் நிரம்பியுள்ளன. நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 400 சீட்டும் நிறப்பப்பட்டுள்ளன. பி.காம் சீட்டுகள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல் சென்னை மாநிலக்கல்லூரியில் மொத்தம் ஆயிரத்து 140 இடங்கள் உள்ளன. இவற்றில் 80 சதவிகித இடங்கள் நிரம்பிவிட்டதாக கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த வருடம் விரைவாக அனைத்து இடங்களும் முதற் கட்ட கலந்தாய்விலேயே நிரம்பி விட்டன. வருகிற 24ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இதற்கு வெறும் 200 இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. முதற் கட்ட கலந்தாய்விலேயே பி.காம். மற்றும் பி.காம் (கார்ப்பரேட்) ஆகிய படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. அதேபோல், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், கணிதம், சைக்காலஜி ஆகிய படிப்புகளுக்கான இடங்களும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. இன்னும் ஒரு சில இடங்களே மீதம் உள்ளன.
இதற்கு நிச்சயம் கடுமையான போட்டி இருக்கும். தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் கல்லூரியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. படிப்பதற்கான நல்ல சூழலும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாநிலக் கல்லூரியின் மதிப்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது’’ என்றார்.பி.காம் படிப்பதால் பல்வேறு போட்டித்தேர்வுக்கு எளிதாக தயாராக முடியும் என்பதாலே மாணவர்கள் அந்த படிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கல்வியாளர் ராஜ ராஜன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: 11ம் வகுப்பில் வணிகவியலை அதிகப்படியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் கல்லூரியில் பி.காம் படிப்பைத்தான் தேர்வு செய்ய முடியும். அதுமட்டுமல்ல பி.காம் படிப்பதால் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கும் அவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும். மேலும் சி.ஏ., சி.எம்.ஏ. போன்வற்றையும் படிக்க முடியும். இதனால் இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்துகொண்டேதான் இருக்கும். இவற்றைத் தவிர ஊடக துறைகளை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள்.
இதற்கு நல்ல வேலை வாய்ப்புகளும் வரும் காலங்களில் உள்ளன. மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், சுற்றுலாத்துறை போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் அதற்கான பலன்கள் அதிகமாக இருக்கும். காரணம் நம்மிடம் சுற்றுலாத்துறையும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசின் முயற்சியால் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ் மொழிக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பி.ஏ. தமிழ் முடித்தவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். * பல வருடமாக நிரம்பாமல் இருக்கும் மலையாளம், உருது படிப்புகள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை மலையாளம், உருது போன்ற படிப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில் கடந்த சில வருடங்களகாக இடங்கள் நிரம்புவதில்லை. அப்படி சேர்ந்தாலும் ஒற்றைப் படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்கிறது. இதற்கு காரணம் அதற்கான பேராசிரியர்கள் இல்லாததே என கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. எனவே அரசுக் கல்லூரிகளில் இதற்கு உரிய பேராசிரியர்களை நியமித்து அந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.