பத்திரிக்கை செய்தி
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்
அரசுப்பள்ளிகளில் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களாக 2012 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர்களை இதுவரை பணிநிரந்தரம் செய்யவில்லை என்பதால் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களின் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.ஆனாலும் எங்களின் பணிநிரந்தர கோரிக்கை கனவாகவே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது நாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.பொன்முடி அவர்களும்,புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.சரவணன் அவர்களும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 2017 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் திரு.டி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பேசினார்.
2021 பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவின் துணைப் பொது செயலாளர் திரு.ஆ.ராசா அவர்களும்,அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களும் நேரில் கலந்து கொண்டு எங்களின் பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும்,பரப்புரையிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறினர்.தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் என்ற பகுதிநேர ஆசிரியர் கோரிக்கை வைத்த போது இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறும் என்றார்.ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையும் நிலையிலும் எங்களுக்கான எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வித்துறை உயரதிகாரி உங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கான மே மாத ஊதியம் வழங்கப்படும் மற்றும் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து பரிசளிக்கப்படும் என்றார்.நாங்களும் அதை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை முடித்துக் கொண்டோம்.
மீண்டும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 11 நாட்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் 2,500 ரூபாய் ஊதிய உயர்வும்,மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்று அக்டோபர் 4 ஆம் தேதி ஊடகங்களின் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டார். அது எங்களுக்கான நிரந்தர தீர்வு இல்லை என்றாலும் இன்று வரை இந்த அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்பாகவே உள்ளனவே தவிர அரசாணையாக வரவில்லை. தேர்தல் அறிக்கையில் சொன்னதும், நிறைவேறவில்லை, ஆட்சிக்கு வந்த பின்பு அறிவித்த அறிவிப்புகளும் செயல்வடிவம் பெறவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஆதரித்தவர்கள் ஆட்சிக்கு வந்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும் சமூக நீதி பேசும் திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
10,000 ரூபாய் மாத ஊதியத்தில் அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே திமுகவின் தேர்தல் அறிக்கை வரிசை எண் 181 ல் கொடுத்த வாக்குறுதியின் படி எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 27.12.23 புதன்கிழமையன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்குள்ளாக எங்களுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த போராட்டத்தின் மூலமாகவும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.