10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் - குழப்பத்தில் அதிகாரிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 30, 2023

Comments:0

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் - குழப்பத்தில் அதிகாரிகள்

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் - குழப்பத்தில் அதிகாரிகள்

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவரால் சிவகங்கை கல்வித் துறை அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மேலும் அம்மாணவரை பள்ளியை விட்டு நீக்கியுள்ளனர்.

சிவகங்கை அருகே மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதி முத்துராமன், பார்வதி. இவர்களது 2-வது மகன் சரவணன் 2020-ம் ஆண்டு வி.மலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார். 2022-ம் ஆண்டு மே மாதம் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதினார். இதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்டில் நடந்த துணைத் தேர்வில் தோல்வி அடைந்த மூன்று பாடங்களையும் எழுதினார். இதில் கணிதம், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் அறிவியல் பாடத்தில் எழுத்து தேர்வில் (கருத்தியல்) 15 மதிப்பெண்கள், செய்முறையில் 25 மதிப்பெண்கள் என 40 மதிப்பெண்கள் பெற்றார். தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் போதும் என்றாலும், எழுத்து தேர்வில் குறைந்தது 20 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

மேலும் தேர்வுத் துறை வெளியிட்ட இணைய வழி மதிப்பெண் சான்றிதழில் அறிவியல் பாடத்தில் தோல்வி என குறிப்பிடும் இடத்தில் ‘எப்’ என குறிப்பிடாமல் காலியாக இருந்தது. அசல் மதிப்பெண் சான்று வர தாமதமாகும் என்பதால், இணையவழி சான்றை மாணவர் பள்ளியில் கொடுத்துள்ளார்.

அறிவியல் பாடத்தில் 40 மதிப்பெண்கள் என இருந்ததை பார்த்த ஆசிரியர்கள், தேர்ச்சி பெற்று விட்டார் என நினைத்து பிளஸ் 1 வகுப்பில் சேர்த்து கொண்டனர். தொடர்ந்து கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 1 தேர்விலும் 600-க்கு 254 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். தற்போது பிளஸ் 2 காலாண்டு தேர்வு முடிந்து, அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பட்டியலை தயாரித்த போது, சரவணனின் அசல் சான்றை சரி பார்த்தனர். அப்போது அவர் 10-ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதது தெரியவந்தது. இதையடுத்து சரவணனின் பெற்றோரை வரவழைத்து, மாற்றுச் சான்று கொடுத்து மாணவரை வெளியேற்றினர். இது குறித்து மாணவரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

இதனால் குழப்பம் அடைந்த கல்வித் துறை அதிகாரிகள், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகத் தினரிடம் கேட்டபோது, ‘‘இணைய வழி சான்றிதழில் தேர்ச்சி என இருந்தது. அதனால் சேர்த்து கொண்டோம். அசல் சான்று வந்த பிறகு அம்மாணவர் எங்களிடம் கொடுக்காமல் விட்டு விட்டதால் குழப்பம் ஏற்பட்டது’ என்றனர்.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது ‘‘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews