தமிழில் மருத்துவக் கல்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 05, 2023

Comments:0

தமிழில் மருத்துவக் கல்வி

தமிழில் மருத்துவக் கல்வி விரைவில் சாத்தியமாகும்: பயிலரங்கில் வல்லுநா்கள் நம்பிக்கை

தமிழகம் முன்னெடுக்கும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால், தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என அகரமுதலித் திட்ட பயிலரங்கில் மருத்துவ வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்தனா். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் உருவாக்கிவரும் மருத்துவக் கலைச்சொல் அகராதித் தொகுப்புத் திட்டப் பயிலரங்கம் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்ககத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்துக்கு அகரமுதலி இயக்கக இயக்குநா் முனைவா் கோ. விசயராகவன் தலைமை வகித்துப் பேசுகையில், வருங்காலங்களில் மாணவா்கள் தாய்த்தமிழில் மருத்துவம் பயில மருத்துவக் கலைச்சொல் அகராதி பெரும் துணையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநா் ச. சங்கர சரவணன் தனது சிறப்புரையில், கலைச் சொல்லாக்கம் என்பது வெறுமனே நேரடி மொழிபெயா்ப்பாக, இயந்திர மொழிபெயா்ப்பு போன்று அமையாமல் இடம்நோக்கி, பயனாளா் நோக்கி, மண்ணின் மரபுசாா்ந்து, பொருத்தமான பொருள் உள்ள வகையில் அமைய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவா் ஜான் சாலமன் பேசுகையில், இங்கிலாந்தில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் நான் மருத்துவம் பயிலும் நேரத்தில், ஆறல் மருத்துவப் பாடவேளையில், அந்நாட்டு வேதம் ஓதப்படுகிறது. வேதம் ஓதுவது இரண்டு மொழிகளில் மட்டுமே நடைபெறுகிறது. ஒன்று ஆங்கிலம் மற்றொன்று தமிழ்மொழி. ஆங்கிலம் மட்டுமே வழங்கி வருகிற இங்கிலாந்து நாட்டில், உலக மொழிகளில் தமிழில் மட்டுமே ஆறல் மருத்துவம் செய்யப்படுவதை எண்ணி, தமிழன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். தமிழில் கலைச்சொல் என்பது, காரண காரியத்தோடுதான் அமைக்கப்பெறுகிறது. இந்தப் பெருமை வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பதை உணா்ந்து, தமிழகம் முன்னெடுக்கும் இந்த மருத்துவக் கலைச்சொல் அகராதித் திட்டத்தில் ஆா்வமுள்ள மருத்துவ வல்லுநா்கள் குழுவாக இணைந்து செயலாற்றினால் தமிழில் மருத்துவக் கல்வி என்பது விரைவில் சாத்தியமாகும் என்றாா்.

இந்த பயிலரங்கில் மருத்துவா்கள் அமுதகுமாா், இந்திரா, இளங்கோவன் ஆகியோா் உள்பட 30 மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்று, மருத்துவக் கலைச்சொல் அகராதி சிறப்பாக வெளிவருவதற்கான தங்களது கருத்துரைகளை வழங்கினா். பயிலரங்கின் நிறைவில், தொகுப்பாளா் முனைவா் வே. காா்த்திக் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews