TNPSC தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு... முறையாகப் பின்பற்றப்படுகிறதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 04, 2022

Comments:0

TNPSC தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு... முறையாகப் பின்பற்றப்படுகிறதா?

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் முறையில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவந்தது. அதன் விளைவாக, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

அதன்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால், அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்று இருந்த காரணத்தால், அந்த இடஒதுக்கீட வாய்ப்பை ஆங்கில வழியில் படித்தவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற பிரச்னை எழுந்தது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு... முறையாகப் பின்பற்றப்படுகிறதா? இந்த நிலையில், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு, தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று தமிழ் வழியில் படித்ததற்குரிய பி.எஸ்.டி.எம் சான்று வாங்கி சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன. அவர்கள், பள்ளிக் கல்வியையும், பட்டப்படிப்பையும் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வாய்ப்பின் மூலமாக கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்துவிட்டு, அதற்கான சான்று வாங்கியவர்கள்.

அந்தப் போக்கு தடுக்கப்பட வேண்டும் என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு என்கிற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனவே, ‘தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஒரு பணிக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டால், அந்த வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப் படிப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டால் அந்தக் கல்வி முழுவதையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

இதை, டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைமுறையின் ஒவ்வொரு நிலையிலும் பின்பற்ற வேண்டும். தமிழ்வழி அல்லது எந்தப் பயிற்று மொழியில் ஒரு மாணவர் தேர்ச்சி பெற்றார் என்பதை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு கல்விச் சான்றுகளில் குறிப்பிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, முழுவதுமாக தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டைப் பெறும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவுசெய்தது. அதற்கான சட்ட மசோதா, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் அன்றைய அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமாரால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 2020-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு, அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக கையெழுத்திடவில்லை. சுமார் ஒன்பது மாதங்கள் கழித்தே அவர் ஒப்புதல் வழங்கினார்.

இந்தச் சட்டத்தின்படி, பட்டப்படிப்பு மட்டுமின்றி 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு பட்டப்படிப்புடன் 10-ம், 12-ம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோல, 10-ம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் நிலவும் சமவாய்ப்பின்மையை நீக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்வழியில் படித்தவர்கள் அரசின் உதவித்தொகையைப் பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழைப் பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி-யின் விளக்க ஆவணத்தில் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்று அளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், முதல் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்துவிட்டு இரண்டாவது பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ்வழியில் படித்திருந்தாலும் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தது. அதேபோல, ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையிலும், இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதில், பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இளங்கலைப்பட்டத்தை தமிழில் படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டலுக்கும், நடைமுறைக்கும் வித்தியாசம் இருப்பதாக அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு படித்துவரும் தமிழ்வழியில் கல்வி பயின்ற இளைஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஏன் இந்தக் குழப்பம்? அரசு தான் பதில் சொல்ல வேண்டும்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews