அரசு பள்ளி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள்; விசாரணை ஒத்திவைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 07, 2022

Comments:0

அரசு பள்ளி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள்; விசாரணை ஒத்திவைப்பு!

அரசு பள்ளி பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் மதுரைக்கிளையின் நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கணிதத்துறையில் பட்டமும், கல்வியியல் துறையில் பட்டமும் பெற்றுள்ளேன். 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தேர்வு முறை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கலான நிலையில், தமிழக அரசு கடந்த 2018 ஜூலை 20-ஆம் தேதி போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடைபெறும் எனக் கூறியது. அது தொடர்பான அரசாணை ஒன்றையும் வெளியிட்டது.

ஆனால்,. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததன் அடிப்படையில், தற்காலிக ஆசிரியர் தேர்வுக்குப் பல வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இதனால், கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற பலர் பணியமர்த்தப் படவில்லை. அதுபோன்று முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆகவே, இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகர், “அரசு பள்ளி பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் மதுரைக்கிளையின் நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கைத் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews