தனியார் பள்ளிகளும் தமிழ்நாடும்: ஒரு வரலாற்றுப் பார்வை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 27, 2022

Comments:0

தனியார் பள்ளிகளும் தமிழ்நாடும்: ஒரு வரலாற்றுப் பார்வை!

பள்ளி மாணவிகளின் தற்கொலை குறித்த செய்திகளும் அவற்றின் பின்னணி குறித்த விவாதங்களும் பெரும் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக தனியார் பள்ளிகளில் இதற்கு முந்தைய காலங்களில் நடைபெற்றபோதும் தற்போதைய நிகழ்வு இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் இன்னும் சில காலங்களில் மறக்கடிக்கப்பட்டு விடும் என்றாலும் இவை தொடர்கதையாக மாற அரசுப் பள்ளிகளின் போதாமையும், பலவீனங்களுமே முக்கிய காரணம்.

தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி பெற வழிவகுத்தவர் காமராஜர் என்றாலும் அதற்கு சற்று பின்பு வந்த பக்தவச்சலம் காலத்தில்தான் பள்ளிக் கல்வியில் தனியார் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த ஒவ்வொரு ஆட்சியிலும் படிப்படியாகத் தனியார் கல்விக் கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக, 1984-ல் எம்ஜிஆர் ஆட்சியில் முதன்முதலாக சுயநிதிக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மாணவர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலித்து கட்டிடம், நிர்வாகச் செலவு மற்றும் ஆசிரியர் சம்பளம் போன்ற அனைத்துவித செலவினங்களையும் பள்ளி நிர்வாகம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனும் நிலை உருவானது. இதைத் தொடர்ந்து பல அரசியல்வாதிகள், அமைச்சர்களின் பினாமிகள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் போன்றவர்கள் கல்விக்கூடங்களை ஆரம்பித்தார்கள். விளைவு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது சிறந்த, கௌரவமான வணிகமாகிப்போனது. இந்தியாவைப் பொறுத்தவரை கல்வியில் தனியார் பங்களிப்பு என்பது 90-களில் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில்தான் ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதற்கு முன்னரே எம்ஜிஆர் தொடங்கி வைத்துவிட்டார். இதன் விளைவாகப் பல புதுமையான, கவர்ச்சிகர பெயர்களில், வடிவங்களில் தனியார் பள்ளிகள் தமிழ்நாட்டில் உருவாகத் தொடங்கின.

இதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகள் படிப்படியாக பலவீனம் அடைந்து நலிவடையத் தொடங்கின. மேலும் தனியார் பள்ளிகள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளைத் தொடங்கியதால் அரசுப் பள்ளிகள் ஆரம்ப கல்வி முறையில் விலகலைச் சந்தித்தன. அங்கு அங்கன்வாடிகள் இருந்தபோதும் பெற்றோர்களுக்கு எல்கேஜி, யூகேஜி தான் விருப்பமான ஒன்றாக இருந்தது. காரணம் குழந்தை பிறந்து அது வாய்பேசத் தொடங்கிய பருவத்தில் எல்கேஜி வகுப்பில் சேர்த்துவிடலாம். மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது எளிதான ஒன்றாக இருந்தது. இந்த நவீன வாழ்வியல் முறை தனியார் பள்ளிகளுக்குச் சாதமாகிப் போனது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகள் தாராளமாக இருந்தும், தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியதன் விளைவு இன்று தனியார் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பல லட்சங்களைக் கொட்டிக்கொடுத்து சேர்க்க வேண்டிய பரிதாப நிலையில் இருக்கின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்கூட கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத கிராமங்களில்கூட தனியார் பள்ளிகள் தொடர்ந்து முளைத்துக்கொண்டிருக்கின்றன. எதிரிடையாக பல கிராமங்களில் அரசு தொடக்கப்பள்ளிகள் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமல் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான அரசு கலை, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் முன்னணியில் இருந்தும் ஏன் பள்ளிகள் மட்டும் அந்தத் தரத்தை எட்ட முடியவில்லை? அரசின் நிதி ஒதுக்கீடுகள்கூட முந்தைய காலங்களை ஒப்பிடும்போது அதிகமாகவே இருக்கிறது. மேலும் விநோதமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள்கூட தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் நிலைதான் இன்னும் தொடர்கிறது. பிரச்சினையின் வேரே இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது எனலாம்.

தங்கள் பணியிடம் மற்றும் பணிச்சூழல் குறித்த நம்பிக்கையின்மை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் இருப்பதுதான் இதற்குக் காரணம். உணவகத்தில் வேலை செய்பவர்கள் வேறு உணவகத்தில் போய் உணவருந்துவது மாதிரி அவர்களுக்கே அவர்கள் வேலை செய்யும் இடத்தின் மீதான அவநம்பிக்கை இருக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இம்மாதிரியான நடவடிக்கைகள் சராசரி வருமானமுள்ள பெற்றோர்களைச் சிந்திக்க வைக்கிறது. என் சொந்த அனுபவமே இதற்கு சாட்சி!

கடந்த வருடம் என் பிள்ளைகளை சென்னை புறநகரில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. குழந்தைகள் தொடர்ந்து அரசுப் பள்ளியிலேயே படிக்கட்டும் என நானும் என் மனைவியும் தீர்மானமாக இருந்தோம். ஆனால் அந்த முயற்சி ஒரே ஆண்டில் தோல்வியுற்றது. தனியார் பள்ளிகளுக்கே திரும்ப வேண்டியிருந்தது. என்ன காரணம்?

படிக்கும் பள்ளியில் உட்கார பெஞ்ச் கிடையாது. நாள் முழுக்க தரையில் உட்கார்ந்து முதுகு வலிக்கிறது. ஆங்கில வழி வகுப்பாக இருந்தபோதும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் ஒழுங்காகத் தெரியவில்லை. உச்சரிப்பு மட்டுமல்ல இலக்கணமும் தெரியவில்லை. இதனை நாங்களும் குழந்தைகளின் குறிப்பேடுகளைப் பார்த்து உறுதி செய்துகொண்டோம்.

ஆசிரியர்கள் பலர் வரிசையாக விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர். ஒருவர் விடுப்பு எடுத்தால் அந்த வகுப்பிற்கு யாரும் வருவதில்லை. சில நேரங்களில் மற்ற வகுப்போடு இணைத்து விடுகின்றனர். கழிப்பறை இருந்தும் ஒழுங்காகச் சுத்தம் செய்யப்படுவது இல்லை. மழை வந்தால் குழந்தைகள் பாடு திண்டாட்டம்தான்.

அரசுப் பள்ளிகள் குறித்த போதாமைகள் ஒருபுறம் இருக்க, தனியார் பள்ளிகளில் அடிக்கடி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் பின்னணி, அகச்சூழல், புறச்சூழல், நெருக்கடிகள் இவற்றை தனியார் பள்ளிகள் புரிந்துகொள்ளத் தவறுகின்றன அல்லது மறுக்கின்றன. குறிப்பாக பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் விதம், அவர்களை நடத்தும் விதம் போன்றவற்றில் நிர்வாகமும் சரி, ஆசிரியர்களும் சரி மேற்கண்ட அம்சங்களை கவனிக்கத் தவறுகிறார்கள்.

ஒரு காலத்தில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். அது முந்தைய தலைமுறை. ஆனால் இன்றைய சூழல் அப்படியல்ல. காரணம் ஒருவருக்கு ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை மட்டுமே இக்காலத்தில் இருக்கிறது. இன்றைய கட்டத்தில் முந்தைய காலம் போலல்லாமல் எல்லா பெற்றோர்களுக்கும் குழந்தைகள் மீதான பற்றுதல் அதிகம். அதன் காரணமாகவே ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்கிறார்கள். மேலும் பெரும்பாலானவர்களுக்குக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அதீத எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருக்கிறது. இது குழந்தைகள் மீது அதிக அழுத்தத்தையும், பாரத்தையும் திணிக்கிறது. இதே அளவிலான அழுத்தம் ஆசிரியர் தரப்பிலிருந்து கொடுக்கப்படும்போது அந்தக் குழந்தைகளுக்கு தப்பிக்க வழியில்லாமல் போகிறது. என்ன செய்ய வேண்டும்?

பி.எட் படிப்பில் உளவியல் பாடத்தைப் படித்துவிட்டு வேலைக்கு வரும் ஆசிரியர்களால் குழந்தைகளின் உளவியலைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. சொல்லப்போனால் தாங்கள் படித்த உளவியல் பாடமே அவர்களுக்குப் புரிவதில்லை. இந்நிலையில் தங்கள் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதே பலருக்குப் புரிவதில்லை. இதுதான் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற காரணம்.

மேலும் பாடத்தில் ஏற்படும் தோல்வி என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அதனால் வானம் இடிந்து விடுவதில்லை. வாழ்க்கை முடிந்து போவதில்லை. இன்றைய சூழலில் பள்ளிகளில் தோல்வியுற்றும், சராசரி படிக்கும் மாணவர்களில் பலர் வாழ்வில் முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தனியார் துறைகளில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்த நடைமுறை காட்சிகளும், உணர்வுகளும் இரு தரப்பிற்குமே வர வேண்டும்.

மேலும் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, அங்குள்ள ஆசிரியர்களின் தரம் இவை உயரும்போது இயல்பாக அங்கு மாணவர் எண்ணிக்கை உயரும். குறிப்பாக அரசு தொடக்கப் பள்ளிகளின் மேம்பாடு மிகவும் அவசியம். அதன் மூலம் மட்டுமே மாணவர்களைத் தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி வரை கொண்டுசெல்ல முடியும். இந்நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை, மர்ம மரணங்கள், சித்திரவதைகள் போன்றவற்றில் அரசிற்கும், தனியார் பள்ளி நிர்வாகம் ஆகிய இரண்டிற்குமே பங்கிருக்கிறது.

இன்றைய சூழலில், அரசுப் பள்ளிகளை விரிவாக ஆய்வு செய்து அவற்றைத் தரமுயர்த்துவதும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் அதிகரிப்பதும் அரசின் முக்கியக் கடமை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews