நீட் விலக்கு மசோதா: ஆளுநர் மாளிகை பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 13, 2022

Comments:0

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் மாளிகை பதில்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன்வடிவு தொடர் பரிசீலனையில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 மார்ச் 29 அன்று ஆளுநர் செயலகத்திற்கு மனு அனுப்பப்பட்டது‌.

மிகவும் கால தாமதமாக (98 நாட்கள் கழித்து) ஜூலை 7, 2022 தேதியிட்ட கடிதம் ஜூலை 11, 2022 அன்று கிடைக்கப் பெற்றோம். பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டச் செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது. “சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது” என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது. “சம்மந்தப்பட்ட அதிகாரி”யின் பரிசீலனை என்றால் எவ்வாறு புரிந்துக் கொள்வது. ஆளுநர் செயலகத்திலா? அல்லது குடியரசுத் தலைவர் செயலகத்திலா?

ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட முன் வடிவு அனுப்பப்பட்டுள்ளது என்று மாண்புமிகு முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்து இரண்டு மாதங்கள் கழித்து, “சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனை”யில் உள்ளது என்று தெளிவற்ற, நேரடிப் பதில் தருவதிலிருந்து தப்பிக்கும் சொல்லாடலை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி உள்ளதால், ஆளுநர் மாளிகையில் இருந்து சட்ட முன் வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு சென்றுள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

பதில் திருப்தியாக இல்லை, நேரடி பதில் வேண்டும் என்று கோரி ஆளுநர் செயலகத்தின் தகவல் தரும் அடுத்த நிலை அதிகாரிக்கு மேல் முறையீடு மனுவை அனுப்பி உள்ளோம்.

தமிழ்நாடு அரசு, சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து, தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews