எண்ணும் எழுத்தும் திட்டம் என்றால் என்ன? என்பதனை விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு வரை, அதாவது 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தமிழ், ஆங்கில எழுத்துக்களையும், 1 முதல் 0 கோடி வரையிலான எண்களை எழுதுவதற்கும், பேசுவதற்கும், புரிந்துகொள்வதற்கும் செயல்வழிக் கற்றல் மூலம் கற்பிக்கும் திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டம்.
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. திட்டம் தொடங்கம் போது இருக்கும் அதே முயற்சி, அர்ப்பணிப்பு திட்டம் முடியும் போதும் இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மாநிலம் முழுவதும் 16 லட்சம் மாணவர்களை Cover செய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிக்கல்வித்துறையின் வரப்பிரசாதம் என்றும், இதனால் ஆசிரியர்களின் பணிப்பளு குறைவதுடன், மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்றும் வரவேற்பு தெரிவிக்கின்றன ஆசிரியர் சங்கங்கள். கரும்பலகை வடிவமாக இல்லாமல் செயல் வழியில் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் உள்ளிட்டவை மூலம் எழுத்துக்களை பொம்மைகளாக காட்டுவது, ஆடல் பாடல் என்று அவர்களுக்கு புரிய வைப்பது எளிமையாக இருப்பதாகவும், குழந்தைகள் விரைவில் அதை புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவதாகவும் பூரிப்படைகின்றனர் ஆசிரியர்கள்.
தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று 3 பாடங்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தினந்தோறும் செயல்வழிக்கற்றலை மேற்கொள்ளப்போவதாக ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளிக்கு வருகை புரிந்த முதல் நாளிலேயே ஆசிரியர்கள் கதை சொல்லித்தந்ததாகவும், மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மாணவர்கள் ஆனந்தமடைகின்றனர். NAS என்ற National Achievement Survey-ல் தமிழ்நாட்டு மாணவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திட்டம், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒருசேர மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.