உதவியாளர் பணிக்கு தலா ரூ.10 லட்சம் வசூல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 27, 2022

Comments:0

உதவியாளர் பணிக்கு தலா ரூ.10 லட்சம் வசூல்!

''தேனை எடுத்தவன், புறங்கையை நக்காமலா இருப்பான்னு பழமொழி சொல்வாங்க... இங்க என்னடான்னா, தேனை எடுக்கிறதுக்கு முன்னாடியே லட்ச லட்சமா அள்ளுறாங்க பா...'' என, பேச்சை தொடங்கியபடியே, நாயரிடம் டீ சொன்னார் அன்வர்பாய்.

''என்ன பாய், பீடிகை எல்லாம் பலமா இருக்கு...'' என்றார், குப்பண்ணா.

''விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை மூலமா எட்டு தேனீ பெட்டிகள் தர்றாங்க... இதுக்கு, அரசு மானியம் ஒதுக்குது பா... ''இந்த தேனீ பெட்டிகளை எப்படி பராமரிக்கணும்னு விவசாயிகளுக்கு பயிற்சியும் தர்றாங்க... ஆனா, பெட்டியின் தரம் சரி இல்லாததால, வாங்கிட்டு போனதும் தேனீக்கள் பறந்துடுது பா... ''ஒரு சில விவசாயிகள் மட்டும், தேனீக்களை மகரந்த சேர்க்கை செய்ய வச்சு பயிர்கள்ல மகசூல் எடுக்கிறாங்க... 'தேனீ பெட்டிகளை வாங்க, தோட்டக்கலை துறையினர் அடிக்கிற கமிஷன்லயே ஒதுக்குற பணத்துல பாதி போயிடுது... அப்புறம் எப்படி தரமான பெட்டியை தர முடியும்'னு விபரம் தெரிஞ்ச விவசாயிகள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''கொடுத்தவனே பறித்து கொண்டான்டீ...'' என திடீரென பாடினார், அண்ணாச்சி.

''பாட்டுக்கு விளக்கம் சொல்லுங்க அண்ணாச்சி...'' என்றார், அந்தோணிசாமி.

''திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வுக்கு சொந்த கட்டடம் இல்லை... வாடகை இடத்துல தான் இருக்காவ வே... ''பல்லடம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆனந்தன் முன்னாடி அமைச்சரா இருந்தாருல்லா... அப்ப, திருப்பூர் குமார் நகர்ல 5 சென்ட் நிலம் வாங்கி, அப்ப முதல்வரா இருந்த ஜெயலலிதாவிடம் குடுத்து நல்ல பேரு வாங்கினாரு வே...

''ஜெயலலிதா உத்தரவுப்படி, அந்த நிலத்தை அவரது உதவியாளர் பூங்குன்றன் பெயர்ல கிரயம் செஞ்சாவ... அந்தம்மா மறைவுக்கு பிறகு, சசிகலா சிறையில இருந்தப்ப, பூங்குன்றனை அழைச்சு அந்த நிலத்தை விபரமா தன் உறவினர் பேர்ல ஆனந்தன் கிரயம் செஞ்சிட்டாரு வே... ''தேர்தல் தோல்வி, இரட்டை தலைமை சச்சரவுன்னு பல குழப்பங்கள்ல, இந்த விவகாரத்தை கட்சி தலைமையும் கண்டுக்கலை... ஆனந்தனை கேட்டா, 'ஆபீஸ் கட்ட அந்த இடம் போதாதுன்னு திரும்ப குடுத்துட்டாவ'ன்னு காரணம் சொல்லுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி. ''தீவிர வசூல் வேட்டை நடக்கறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு தாவிய குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு, 10வது பெயில் தான் கல்வி தகுதின்னாலும், இன்ஜினியரிங் படிச்சவா கூட விண்ணப்பிக்கறான்னு ஏற்கனவே பேசினோமே... ''பெரம்பலுார் மாவட்டத்துல, காலியா இருக்கற 18 இடங்களுக்கு இதுவரை 400 பேர் விண்ணப்பிச்சி இருக்கா...

கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகத்துல, 'இன்டர்வியூ' நடக்கறது ஓய்... ''இந்த வேலைக்கு விண்ணப்பிச்சவா எல்லாம், தி.மு.க., - எம்.பி.,க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள்னு பலரையும் மொய்க்கறா ஓய்... ''அவாளும் இதான் சான்ஸ்னு, இதுவரை 150க்கும் அதிகமானவாகிட்ட, தலா 10 லட்சம் ரூபாய் வரை வசூல் பண்ணிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இருக்கிறதே 18 இடம் தானே... யாருக்குங்க தருவாங்க...'' என அந்தோணிசாமி கேட்க, உதட்டை பிதுக்கியபடியே பெரியவர்கள் கிளம்பினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews