பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: மாநகராட்சி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 27, 2022

Comments:0

பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார் அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், மற்ற மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒன்று என 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் கொண்ட தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் ஆகிய இரண்டு மண்டலங்கள் முன்மாதிரியாக இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இந்த இரண்டு மண்டலங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முழுமையாக செய்தால் ஒரு மனித சக்தி வேலை நாளுக்கு ரூ.382 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 28,006 நபர்களுக்கும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1,055 நபர்களுக்கும் என மொத்தம் 47062 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு மண்டலங்களிலும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 12,190 மனித சக்தி வேலை நாட்களை கொண்டு மழைநீர் வடிகால்களை தூர்வார ரூ.157.34 லட்சம் திட்ட மதிப்பீட்டிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3032 மனித சக்தி வேலை நாட்கள், திரு.வி.கநகர் மண்டலத்தில் 3135 மனித சக்தி வேலை நாட்கள் என மொத்தம் 6,167 மனித சக்தி வேலை நாட்களைப் பயன்படுத்தி 5,098 கன மீட்டர் அளவிற்கான வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளன.

இவ்விரு மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டிலும் நாளொன்றுக்கு குறைந்தது 100 மனித சக்தி வேலை நாட்களைப் பயன்படுத்தி மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேயர் ஆலோசனையின்படி, இப்பணிகளை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் அட்டையுடன் மண்டல அலுவலரை அணுகி தங்கள் வேலைவாய்ப்பிற்கான அடையாள அட்டையை பெற்று பயனடையுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews