புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன: முதல்வர் ஸ்டாலின் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 12, 2022

1 Comments

புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன: முதல்வர் ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன: முதல்வர் ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில், நீட் தேர்வானது ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கிறது; தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குலைக்கப் பார்க்கிறது; சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது; நூற்றாண்டாக நாம் போராடிப் பெற்ற கல்வி உரிமைக்கு ஆபத்தாக வருகிறது என்று நீட் தேர்வை நாம் எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கை மூலமாவும் பல ஆபத்துகள் வரப்போகின்றன.

அதையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அடுத்ததாக- ‘ஒரே நாடு - ஒரே பத்திரப் பதிவு’என்று கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவர்கள்- ‘ஒரே… ஒரே…’என்று முன்வைக்கும் முழக்கம் எல்லாமே இந்த நாட்டை ஒற்றையாட்சித்தன்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிதானே தவிர வேறல்ல! இது மக்களின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பயன்படாது! எனவேதான் இந்தியா முழுமைக்கும் மாநில சுயாட்சித் தத்துவத்தை மலர வைக்கப் போராடியும், வாதாடியும் வருகிறோம்! ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்தை அகில இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வைப்போம். தமிழ்நாட்டில் காலூன்றியபடியே இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் பாடுபடும் இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு சாட்சி வேண்டுமானால் திருப்பூர் ஒன்றே போதும்! 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய பா.ஜ.க. அரசு பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டது! திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தங்களோட ஏற்றுமதி இலக்கை எட்டமுடியாம போனதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்தே தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளவில்லை. ஜி.எஸ்.டி. வரிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திருப்பூரின் மொத்த வர்த்தகம் 24 விழுக்காடு குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள்.

ஏற்றுமதி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. கச்சாப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் பலரும் சிறு குறு நிறுவனங்களை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது! இதை இப்படியே விட்டுவிட முடியாது. எனவேதான், சிறு-குறு நடுத்தரத் தொழில்களை முன்னேற்ற முனைப்போடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. வாழ்க வளமுடன். எண்ணும்எழுத்தும் இயக்கத்தின் மூலக்கருத்துக்கள் அப்படியே புதியகல்விக் கொள்கையை பிரதிபலிப்பதாக உள்ளதே எப்படிங்க???

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews