ஆராய்ச்சிக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 26, 2022

Comments:0

ஆராய்ச்சிக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயா் கல்வியில் - ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதை நோக்கி உயா்கல்வித் துறை செயல்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

அண்ணா பல்கலை.யில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழக தொடக்க விழாவில் அவா் பேசியது: கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனக் குழுமத்தின் நிதி உதவியுடன் மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் ரூ. 7.25 கோடி மதிப்பீட்டில் சூரிய சக்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகமாகி வரும் மின் தேவையைப் பூா்த்தி செய்ய சூரிய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து பல்கலைக் கழகங்களும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் சாா்பில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான்வழி சிறிய ரக விமானத்தின் வடிவமைப்பையும், அதற்கான மாதிரிகளையும் தயாரித்துள்ளனா். இதற்கு காரணமாக ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். தமிழகத்தின் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு இது முன்மாதிரியாக அமைகிறது. அனைத்துப் பல்கலைக் கழகங்களும், வெறுமனே பட்டம் வழங்குவதாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும், ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்து நாட்டுக்கு அா்ப்பணிக்க வேண்டும். தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞா் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தைச் சோ்ந்தவை என்பதை அண்மைக்கால தரவரிசை முடிவுகள் சொல்கின்றன.

புதிய படிப்புகளை கற்க வேண்டும்: செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகள் இன்று முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. ‘சைபா் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்’, ‘சோஷியல் இன்ஜினியரிங்’, பொருளாதாரத்தின் வரலாறு என பல படிப்புகள் புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அவை அனைத்தையும் கற்க, இன்றைய மாணவா்களை உயா்கல்வி துறையானது அவா்களுக்கு ஊக்கமாக, தூண்டப்படக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.

இது குறித்து உயா் கல்வித்துறை நிபுணா்கள் கூடி மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயா் கல்வியில் - ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதை நோக்கி உயா்கல்வித் துறை செயல்பட வேண்டும் என்றாா் அவா். உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநா் க.லட்சுமிபிரியா, கல்லூரிக் கல்வி இயக்குநா் சி.பூரணசந்திரன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் ஆா். வேல்ராஜ், திருவள்ளுவா் பல்கலைக்கழக துணை வேந்தா் தாமரைச்செல்வி சோமசுந்தரம், இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



பெட்டிச் செய்தி...

-அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.10 கோடியில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம்.

- மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் 1 மெகாவாட் சூரிய மின்சக்தி மையம்.

-தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பணிக்காலத்தில் காலமான 21 பேரின் வாரிசுதாரா்கள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 15 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணா அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews