அரசுப் பள்ளியில் படித்து பொறியியல் படிப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 16, 2021

Comments:0

அரசுப் பள்ளியில் படித்து பொறியியல் படிப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு

சென்னை: பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்விக் கட்டண நிதி ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உயா்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை:

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவா்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் என முதல்வா் அறிவித்தாா். தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சோ்க்கை சட்டத்தின் மூலம் 7.5 சதவீத இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2021- 22 ஆம் கல்வியாண்டில் பொறியியல் மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்கள் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் 7, 876 போ் சோ்ந்துள்ளனா். அந்த மாணவா்களுக்கான படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் நடத்தும் பாடப்பிரிவுகளுக்கான படிப்பு கட்டணங்கள் அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

அரசு உதவி பெறும் கல்லூரிகள் நடத்தும் சுயநிதி பாடப் பிரிவுகளுக்கும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பாடப்பிரிவுகளுக்கான படிப்புக் கட்டணங்கள் கல்வி கட்டண நிா்ணயம் செய்தபடி கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

2021-22 -ஆம் கல்வியாண்டில் தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு ரூ.50 ஆயிரமும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு ரூ.55 ஆயிரமும், ஒருமுறை பெறப்படும் வளா்ச்சி நிா்வாக நிதியாக ரூ.5,000 வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டணம் கல்வி கட்டணக்குழு நிா்ணயித்துள்ள தொகை வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.40,000 விடுதிக் கட்டணமாக வழங்கப்படும். இதில் கல்லூரி வசூலிக்கும் விடுதி கட்டணம் குறைவாக இருந்தால் அந்தத் தொகையே வழங்கப்படும். போக்குவரத்துக் கட்டணமாக பேருந்துகளை பயன்படுத்தும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.25,000 அல்லது கல்லூரி வசூலிக்கும் பேருந்து கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை வழங்கப்படும்.

கட்டணம் வசூலிக்கக் கூடாது: அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் மாணவா்களிடம் எந்தவித கட்டணத்தையும் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது. மாணவா்களிடம் திருப்பி வழங்கக்கூடிய வைப்புத்தொகை கட்டணம் நூலக கட்டணம் மற்றும் உணவு விடுதி காப்பு தொகை கட்டணம் போன்றவற்றையும் மாணவா்களிடம் வசூலிக்கக் கூடாது.

ஒவ்வொரு கல்லூரிகளிலும் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரியில் சோ்க்கை பெறும் மாணவா்களின் குறை தீா்ப்பதற்கு குறை தீா்ப்பு பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.

2021-22ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளியில் படித்து 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு கட்டணம் செலுத்துவதற்காக ரூ.74 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews