NAAC கமிட்டி ஆய்வு வாபஸ்: அண்ணா பல்கலை., க்கு சிக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 08, 2021

Comments:0

NAAC கமிட்டி ஆய்வு வாபஸ்: அண்ணா பல்கலை., க்கு சிக்கல்

தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலான, 'நாக்' சான்றிதழ் பெறுவதில் அண்ணா பல்கலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாக் கமிட்டியின் ஆய்வு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.நாடு முழுதும் செயல்படும் கலை, அறிவியல், இன்ஜினியரிங் உள்ளிட்ட அனைத்து வகை கல்லுாரிகளும், பல்கலைகளும், யு.ஜி.சி., என்ற மத்திய பல்கலை மானிய குழுவிடம் இருந்து நிதி பெற, இரண்டு வகை அங்கீகாரம் பெற வேண்டும். கட்டமைப்பு

யு.ஜி.சி.,யின், 12 பி அந்தஸ்துக்கான சான்றிதழும், அதை தொடர்ந்து யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட, 'நாக்' சான்றிதழும் பெற வேண்டும். நாக் சான்றிதழ் பெற, பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.கல்லுாரி மற்றும் பல்கலை கட்டமைப்பு; மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வசதிகள்; மாணவர், பேராசிரியர் எண்ணிக்கை; ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிதி நிலைமை, ஆராய்ச்சி முடிவுகள் உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இது உண்மையா என, 'நாக்' கமிட்டியினர் நேரில் ஆய்வு நடத்துவர்.இந்த வகையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, ஏ.சி.டி., கல்லுாரி, கட்டட வடிவமைப்பியல் கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றை உள்ளடக்கி, பல்கலை சார்பில், நாக் அந்தஸ்து பெறப்படும்.

அங்கீகாரம்

ஏற்கனவே, 2014ல், 3.46 என்ற தர மதிப்பெண்ணுடன், 'ஏ கிரேடு' வகை நாக் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இது, ஐந்து ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என்பதால், 2019 செப்., மாதத்துடன் காலாவதியாகி விட்டது.புதிதாக நாக் அங்கீகாரம் பெற மத்திய தர அங்கீகார குழுவுக்கு, அண்ணா பல்கலை விண்ணப்பித்தது. அதற்கான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாக் கமிட்டி சார்பில் நேரடி ஆய்வு நடத்த தேதியும் குறிக்கப்பட்டது.குளறுபடிகள்இந்நிலையில், அண்ணா பல்கலை தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், நிதி மற்றும் கட்டமைப்பு குறித்து ஆவணங்களில் குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, நாக் கமிட்டியின் ஆய்வு முடிவு, திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், நாக் அங்கீகாரம் பெற அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஓராண்டுக்கு அண்ணா பல்கலைக்கு நாக் அங்கீகாரம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், பல்கலைக்கு கிடைக்க வேண்டிய நிதி உதவி, புதிய திட்டங்கள், புதிய ஆராய்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews