தீபாவளி பண்டிகையை முன்னிட்டு C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 24, 2021

Comments:0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 23) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு, 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலை காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து இருந்த நிலையில், கோவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக, பொருளாதார விளைவுகள் அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது.

குறிப்பாக, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளன.

இதன் காரணமாக, ஏறத்தாழ அனைத்து வணிக நடவடிக்கைள், குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் வணிகம் மற்றும் செயல்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள / நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என, மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400 பெறுவர். மொத்தத்தில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews