பள்ளி திறப்பால் மாணவ - மாணவியருக்கு... பதற்றம்!:கவனமாக கையாள நிபுணர்கள் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 11, 2021

Comments:0

பள்ளி திறப்பால் மாணவ - மாணவியருக்கு... பதற்றம்!:கவனமாக கையாள நிபுணர்கள் எச்சரிக்கை

'பள்ளியில் மற்றவர்களுடன் பழகுவதற்கு மாணவர்களுக்கு பதற்றம் ஏற்படும் பிரச்னையை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

மன அழுத்தம்

இந்நிலையில் உலக மன நல நாளையொட்டி, குருகிராமில் உள்ள பாரஸ் மருத்துவமனையின் மூத்த மனநல மருத்துவர் டாக்டர் ஜோதி கபூர், 'கோர்ஸ்டோன்' என்ற சர்வதேச அரசு சாரா அமைப்பின் இந்திய பிரிவுத் தலைவர் கிரேசி ஆன்ட்ரூஸ் ஆகியோர் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு மேலாக மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு செல்லவில்லை.நீண்ட இடைவெளிக்குப் பின், தங்கள் நண்பர்கள், ஆசிரியர்களை சந்திக்க உள்ளனர்.

அவர்களுடன் கூடி பழகுவது தொடர்பாக பலருக்கு அச்சம், பதற்றம் இருக்கலாம். கொரோனா தங்களுக்கு தொற்றிவிடுமோ என்ற அச்சத்தால் கூடி பழகுவதற்கு மாணவர்கள் தயங்கலாம். கொரோனாவால் ஓராண்டாக பள்ளிக்கு செல்லாததால் மன அழுத்தத்தில் மாணவர்கள் இருக்கலாம். பள்ளிக்கு மீண்டும் செல்வதால் பதற்றம், பயம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

பயப்பட வேண்டாம்

திடீரென அதிக கோபம் வருவது, படிப்பில் கவனம் குறைவது போன்றவை அதன் வெளிப்பாடாக இருக்கலாம்.இதை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் அந்த பயத்தை போக்க வேண்டும். ஒன்றும் பயப்பட வேண்டாம் என வெறும் வார்த்தைகளால் மட்டும் சமாதானப்படுத்தினால் போதாது. மாணவர்களின் உண்மையான மனநிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதற்கு முன் பெற்றோர் உட்பட வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பள்ளியில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்; அது மாணவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக இருக்கும். பாதுகாப்பு நடவடிக்கை

கொரோனா தொற்று இளம் வயதினரை அதிகம் பாதிப்பதில்லை. தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை என்பதை மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும்.முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாணவர்களை பழக்கிட வேண்டும். நண்பர்களுடன் அதிக நெருக்கமாக இல்லாமல், அதே நேரத்தில் கலந்துரையாடும், சைக்கிள் ஓட்டுவது, கபடி போன்ற விளையாட்டுகளை விளையாட ஊக்கப்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

54 சதவீத பள்ளிகள் திறப்பு

உலக வங்கி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை, யூனிசெப் ஆகியவை இணைந்து கொரோனா கல்வி மீட்பு குறித்த தகவல்களை இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றன.'உலகெங்கும் 200 நாடுகளில் 80 சதவீத பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. அதில் 54 சதவீத பள்ளிகள் மட்டுமே நேரடி வகுப்புகளை நடத்துகின்றன. 10 சதவீத பள்ளிகள், தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், 34 சதவீத பள்ளிகள் இரண்டையும் கலந்து செயல்பட்டு வருகின்றன' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படாவிட்டாலும் பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது போன்ற தடுப்பு முறைகளை பயன்படுத்தி வகுப்புகளை தொடர வேண்டும் என, அதில் கூறப்பட்டுள்ளது. பாரம்பரியத்தை பின்பற்றுவோம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தில் நடந்த விழாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:மனநலத்தை பராமரிப்பதில் நம் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பண்டிகைகள், மத விழாக்கள், பூஜைகள் செய்வது போன்றவை, நம் மன நலத்தை சிறப்பாக பேணி காப்பதற்காக முன்னோர்களால் உருவாக்கப்பட்டவை. மனநலத்தை காப்பதில் நம் பாரம்பரிய நடைமுறைகளை மனநல பாடதிட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆராய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews