கடும் எதிர்ப்பால் தற்காலிகப் பதிவாளரை இணை பதிவாளராக மாற்றிய புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 09, 2021

Comments:0

கடும் எதிர்ப்பால் தற்காலிகப் பதிவாளரை இணை பதிவாளராக மாற்றிய புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் தற்காலிகப் பதிவாளராகப் பணியாற்றியவர் பேராசிரியராகப் பணிபுரியாத சூழலில் சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமித்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் அவரை இணை பதிவாளராகப் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மாற்றியுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் தரவரிசை மோசமாகச் சரிந்துள்ளதற்கு பதிவாளர், நிதி அதிகாரி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நூலகர் உட்பட 28 முக்கியப் பணியிடங்களை பல ஆண்டுகளாக நிரப்பாததுதான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச்சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். நவம்பருக்குள் முக்கியப் பொறுப்புகளை நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தற்காலிகப் பதிவாளராக இருந்த சித்ராவை, பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமித்துள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. ஏனெனில் இவர் பேராசிரியராகப் பணிபுரியாமல் கல்லூரி முதல்வராக முடியாது என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங்கிடம் மனுவும் தரப்பட்டது. இது யுஜிசி விதிகளுக்கு எதிரானது எனக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உயர் கல்வி நிறுவனங்களில் அவர் 15 ஆண்டுகள் கற்பிக்கும் பணியில் ஈடுபடவில்லை என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டனர். இந்நிலையில் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், "புதுச்சேரி சமுதாயக் கல்லூரி முதல்வர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள சித்ராவின் பணியானது இனி இணை பதிவாளராகவே இருக்கும். அதே நேரத்தில் சமுதாயக் கல்லூரி ஆலோசகராகவும் அவர் கூடுதலாகச் செயல்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றிப் புகார் தெரித்துள்ள சங்கங்கள் தரப்பில் கூறுகையில், "சமுதாயக் கல்லூரியில் பொறுப்பு முதல்வராக, பேராசிரியராகப் பணிபுரியாத சித்ரா அப்பொறுப்பில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை. தகுதியில்லா அவர் தொடரக்கூடாது. யுஜிசியில் 10 ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 110 ஆராய்ச்சி மதிப்பெண் எடுத்திருக்கவேண்டும். அதேபோல் தகுதியுடையவரை சமுதாயக் கல்லூரி முதல்வராக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்கலைக்கழகத்தைக் காக்க நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிடுவோம்" என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews