ஆசிரியர்களே... அத்தனை புண்ணியமும் உங்களுக்கே - இன்று ஆசிரியர் தினம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 05, 2021

Comments:0

ஆசிரியர்களே... அத்தனை புண்ணியமும் உங்களுக்கே - இன்று ஆசிரியர் தினம்

ஆசிரியச் சமுதாயமே அன்பான வணக்கம். 'ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்'என காமராஜர் கூறியுள்ளார். அவர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அக்கல்வியை போதிக்கும் ஆசான்களே! அனைத்து மாணவர்களையும் அற்புதமாக்கும் செயல் வீரர்களே! இப்புண்ணிய பூமியில் பிறந்த அனைத்து குழந்தைகளும் தங்களின் திருவடிக்கே. ஒரு பணியில் சேர்க்கும்பொழுது அந்நபரின் நன் மதிப்பெண், நன் நடத்தை, வேலைக்கேற்ற அறிவை வைத்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆனால் எந்த குழந்தை பற்றியும் தெரியாமல், அனைவரையும் ஒன்று போல் அமர்த்தி, விடாமல் அழும் குழந்தையைக் கூட, ஓரிரு நாளில் சமாளித்து, பின் அக்குழந்தையின் வயதுக்கேற்ற அறிவை போதிக்கிறீர்கள்.பெற்றோருக்கு தன் குழந்தையை மட்டுமே சிறப்பாக பார்க்கத்தெரியும். ஆனால் ஆசிரியரான உங்களுக்கு மட்டுமே அனைத்து குழந்தைகளையும் ஒன்று போல் அரவணைக்கத்தெரியும். இந்த ஒற்றுமையை கற்கத்தான் உலகமே உம்மடியில் கிடக்கிறதோ!

*அங்கீகாரம்:

நீங்கள் பல ஆசிரியரிடம் கற்றிருப்பீர்கள். அதில் ஒரு சிலர் உங்கள் மனதில் அப்படியே பதிந்திருப்பர். அவர்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடு இன்று நீங்கள். உங்களின் வெளிப்பாடுதான் அடுத்த தலை முறை. தாயைப் பார்த்து பொம்மையை தன் குழந்தை போல் பாவித்த குழந்தை, பள்ளிக்கு வந்த ஒரு சில நாட்களில் வீட்டிலுள்ள அனைவரையும் அமரவைத்து உங்களை வீட்டில் பிரதிபலிக்கும். 'அழக்கூடாது, அம்மா வந்துவிடுவார்கள், நல்ல பிள்ளை, சொன்ன பேச்சு கேட்கணும் சரியா, எங்கே அ சொல்லு ஆ சொல்லு' என பாராட்டியதை அப்படியே சொல்லும். ஆசிரியரிடம் 'உங்களைப் போலவே வீட்டில் பாடம் எடுக்கிறாள்' என்று பெற்றோர் சொல்வது எத்தனை பெரிய அங்கீகாரம். பெற்றோர்களால் வழிக்கு கொண்டு வரமுடியாத பிள்ளைகள் கூடஆசிரியரின் சொல்லுக்கு மட்டுமே தலையசைக்கும். அன்பு, அறிவு, ஒழுக்கம் அனைத்தும் உங்களிடத்தில் இருந்து தான் இளைய சமுதாயத்திற்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உங்களின் இயல்புகளை அவர்களின் இதயங்கள் பிரதிபலிக்கின்றன. இன்றைய இந்திய இளைஞர்களின் ஏணிப்படிகளே... உங்களை உயர்த்திப் பார்ப்பதில் இறுமாப்பு கொள்கிறேன். பள்ளி என்றால் கரும் பலகையும், சுண்ணாம்புக் குச்சியும் இருக்கும். அச் சுண்ணாம்புக் குச்சியை அழகாக கரும் பலகையில் மிளிரச் செய்வது உங்களின் அறிவு என்ற கை வண்ணமே. அது போல மாணவனின் மானசீகமான எதிர் காலத்தை உங்களின் அறிவு என்ற அகல்விளக்கேற்றி இருள் நீக்க வழிவகை செய்கிறீர்கள். எந்த கிணற்றையும் தண்ணீர் கொண்டு நிரப்ப முடியாது. ஆனால் நாம் விரும்புவது நல்ல தண்ணீர். நல்ல திறமையான மாணவர்கள் அள்ள அள்ள குறையாத ஊற்றுக் கிணறு போன்றவர்கள். ஆனால் உங்களிடம் வரும் மாணவர்கள் எத்தனை வகை? அத்தகையோரை நீங்கள் துார் வாரி, அதிலேயே ஆழ்துளை என்னும் நம்பிக்கையை இட்டு அவர்களை நல்ல தண்ணீர் கொடுக்கும் கிணறாக மாற்றி விடுகிறிர்கள். இது எத்தனைப் பெரிய அசாதாரண நிகழ்வு. வருடத்திற்கு வருடம் நீங்கள் நுாற்றுக்கணக்கான மாணவர்களை சந்திக்கின்றீர்கள். எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் உங்களின் மாணவர்கள் எனது ஆசிரியர் என்று உங்களைக் கண்டதும் ஓடோடி வருகிறார்கள் என்றால் நீங்கள் அறிவான சமுதாயத்தை மட்டும் உருவாக்கவில்லை, அதற்கும் மேலாக ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

*இவரே என் ஆசிரியர்:
இதற்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு நமது முன்னாள் இந்திய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா. ஒரு முறை அவர் மஸ்கட்டுக்கு சென்றிருந்தார். அப்போது ஓமன் நாட்டு அரசர் அவர் வரும் முன் அங்கு சென்று, விமானம் வந்தவுடன் மேலே சென்று அழைத்து வந்தார். பின் அவரே அவருக்கு வாகன ஓட்டியாக அமர்ந்து ஜனாதிபதி இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும் மக்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர். பின் பத்திரிக்கையாளர் எத்தனையோ குடியரசுத்தலைவர்கள் வந்த போது நீங்கள் இவ்வாறு வரவேற்கவில்லையே இவருக்கு மட்டும் ஏன் இத்தகைய வரவேற்பு என கேட்டவுடன், நான் பூனாவில் படிக்கும் போது இவரே என் ஆசிரியர். இது என் ஆசிரியருக்கு நான் கொடுக்கும் மரியாதை என்றார். இத்தகைய ஆசிரியர்கள் ஆசிரியர் தினத்தன்று மட்டும் கொண்டாடப் படவேண்டியவர்கள் அல்லர், அனுதினமும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

ஒரு ஆசிரியராக பணியாற்றி பின்நாளில் இந்தியாவின் ஜனாதிபதியாக உயந்தவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவர் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஐ ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ஏனெனில் தான் ஜனாதிபதியாக இருந்தாலும் தனக்கு பிடித்தது ஆசிரியர் பணிதான் என்றும், நாட்டுக்கேற்ற நற்பணிகளை ஆசிரியப் பணியின் மூலம் அனைவருக்கும் எடுத்து செல்ல முடியும் என்பதையும், விஞ்ஞானத்தையும் , மெய் ஞானத்தையும் நன்கறிந்து மக்களுக்கு சென்றடைய அரும் பாடு பட்டவர். *மிகச்சிறந்த ஆசான்கள்:

உலகமே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை கொண்டாடுகிறது. ஆனால் அவர் கொண்டாடியது தனக்கு பிடித்த ஆசிரியர் சிவ சுப்பிரமணிய ஐயரையும் ஆசிரியத் தொழிலையும்தான். ஐயம் தீர்ப்பவர் மட்டும் ஆசான் அல்ல. வாழ்வில் அன்பையும், அறிவையும், ஆரோக்கியத்தையும் அள்ளி கொடுக்கும் ஆசிரியர்களான நீங்களே மிகச்சிறந்த ஆசான்கள்.வருடக்கணக்கை முடிக்கின்ற நாளன்று ஆராய்ந்து பார்த்து நமது உயர்வையும், நம்மால் உயர்ந்தவர்களையும் கணக்கிட்டு அதில் உயர்வு கண்டால் அது புண்ணிய கணக்கு. அதே போல் தங்களால் உயர்ந்த மாணவர்கள் எத்தனை பேரோ அத்தனை புண்ணியமும் உங்களுக்கே. உங்களின் சாயல்களை மட்டும் உருவாக்காமல் சாதனையாளர்களை உருவாக்கும் நீங்கள் நுாறாண்டு வாழுங்கள். 'நீங்கள் மாணவர்களின் முன்னுதாரணம். நீங்கள் மாணவர்களின் மூலதனம்' என்பதறிந்து உலகம் உங்களை வாழ்த்தட்டும்.

-ஆர்.சென்மீனா,தனித்திறன் பயிற்சியாளர், கோயம்புத்துார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews