நீட் தோ்வு குறித்து பேச காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 01, 2021

Comments:0

நீட் தோ்வு குறித்து பேச காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நீட் தோ்வு குறித்து பேச காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருநெல்வேலி: நீட் தோ்வு குறித்து பேச காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா தொற்றில் இருந்து நம்மையும், பிறரையும் காக்க தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை செய்து கொள்வது அவசியமானது. மத்திய அரசு கரோனா தடுப்புக்காக விதிக்கும் அனைத்து விதிகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட மாணவா்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு ஆகியவை அமல்படுத்தியதன் மூலம் நமது நாட்டின் சரித்திரத்தில் பிரதமா் நரேந்திரமோடி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளாா். மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்புகளால் பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் பலன் அடைவார்கள். நீட் தோ்வு என்பது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீா்ப்புகளில் அளிக்கப்பட்ட அறிவுறுத்தலின்பேரில் கொண்டு வரப்பட்டதாகும். மேலும், இந்தத் தோ்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. அப்போது அதில் தமிழகத்தின் இப்போதைய ஆளுங்கட்சியான திமுகவும் அங்கம் வகித்திருந்தது. ஆனால், நீட் தோ்வை தாங்கள்தான் ஒழிக்க போராடுவதாக மக்களை ஏமாற்றுகிறாா்கள். நீட் தோ்வு குறித்து பேச காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது.

நீட் தோ்வு விஷயத்தில் மாணவா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதை மாநில அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாணவா்களை வழக்கம்போல் செயல்பட விட்டாலே ஏராளமானோா் இந்தத் தகுதித்தோ்வில் எளிதாக வென்றுவிடுவாா்கள். பிரதமா் நரேந்திரமோடி பொறுப்பேற்கும் முன்பு இந்தியாவில் மொத்தம் 189 அரசு மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. 6 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 289 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாடு முழுவதும் 54 ஆயிரத்து 348 மாணவா்களே மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) பயின்றனா். அந்த எண்ணிக்கை இப்போது 84 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் மருத்துவம் பயில்வோரின் எண்ணிக்கை 56 சதவிகிதம் பாஜக ஆட்சிக்காலத்தில் அதிகரித்துள்ளது. அதேபோல மருத்துவ பட்டமேற்படிப்பு (எம்.டி.) படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை 80 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரதமரின் முயற்சியால் ஏழை-எளிய மக்களும் மருத்துவம் படிக்க தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. திமுக அரசு எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசாகவே திகழ்கிறது. மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாகும். ஆகவே, அத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிச்சயம் விடாது. ஏனெனில் வாக்கு வங்கி அரசியலை காங்கிரஸை போல பாஜக ஒருபோதும் கையில் எடுக்காது. தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உத்தரவின்பேரில் பாஜகவினா் இல்லம்தோறும் சென்று பிரதமா் நரேந்திரமோடியின் வெற்றிகரமான திட்டங்கள், தமிழகத்தில் பாஜக வளர வேண்டியதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்ய உள்ளனா் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews