ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி முதன்முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்புகளை ஏற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அந்த வகையில், சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க 8.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி ஜீப்பில் நின்று கொண்டு காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர், கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். வழக்கமாக கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நடத்தப்படும். ஆனால், இம்முறை கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி.

சுதந்திர தினத்தில் முதல்வர்கள் தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். இந்தியாவின் அனைத்து முதலமைச்சருக்கும் கொடியேற்றும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். 75வது சுதந்திர தின நினைவு தூண் கல்லாலும் மண்ணாலும் உருவானதல்ல. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் ரத்தத்தாலும் சதையாலும் உருவானது. வேலுநாச்சியார், கட்டபொம்மன், தில்லையாடி வள்ளியம்மை, பெரியார் போன்ற ஏராளமான தியாகிகளின் நினைவாக கட்டப்பட்டது நினைவுத் தூண். பாகிஸ்தான் போரின் போது இந்திய நாட்டிற்காக நிதி திரட்டி கொடுத்தவர் கலைஞர். கார்கில் போரின் போது கலைஞர் அரசு மூன்று தவணையாக நிதி திரட்டிக் கொடுத்தது. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து, பயணம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர், தன்னிறைவு பெற்ற நாடாக திகழவேண்டும் என்ற வாஉசியின் கனவை நிறைவேற்ற அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மக்களை கொண்டு நிறுத்தியுள்ளது கொரோனா.

சமூகம், அறிவியல், பொருளாதாரம் ஆகிய மூன்றிலும் தமிழகம் ஒருசேர வளர வேண்டும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றதாக தமிழ்நாடு மாற வேண்டும் என்றார். மேலும், விடுதலை போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.17 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.8,500ல் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் மதுரை காந்தி அருங்காட்சியம் ரூ.6 கோடியில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews