ரோபாட்டிக்ஸ்& ஆட்டோமேஷன் பொறியியல் படிப்பு பற்றிய தகவல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

ரோபாட்டிக்ஸ்& ஆட்டோமேஷன் பொறியியல் படிப்பு பற்றிய தகவல்கள்

தற்போது ரோபோக்கள் பலதுறைகளில் மனிதனுக்கு உதவி செய்து வருகின்றன. மருத்துவத்துறை, கழிவு நீர்மேலாண்மை உள்ளிட்ட பல துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதர்கள் கஷ்டப்பட்டு செய்யக் கூடிய தொடர்ச்சியான பல செயல்களை முழு தானியங்கி அல்லது பகுதி தானியங்கி முறையில் செய்யக் கூடிய ரோபோக்களை உருவாக்கவும், அதற்குத் தேவையான உதிரி பாகங்களை பொறியியல்ரீதியில் தயாரிக்கவும் பயன்படும் படிப்பே ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் படிப்பாகும். இந்த படிப்பு நான்கு ஆண்டு பட்டப் படிப்பாகும். இந்தப் படிப்பு விருதுநகர் மாவட்டம் சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு குறித்து அக்கல்லூரி முதல்வர் எஸ்.அறிவழகன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: ""வரும் காலங்களில் அனைத்து துறையிலும் ரோபோவின் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது மருத்துவத்துறை போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் உணவங்களிலும், சமையலறையிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகக் தகவல்கள் கிடைத்துள்ளன. மனிதனால் செய்ய இயலாத வேலைகளையும் ரோபோக்கள் செய்யும். ஆட்டோமேஷன் என்பது பொதுவாக மனிதர்களால் செய்யப்படும் பணிகளைச் செய்ய இயந்திரங்கள், கணினி, மென்பொருள்கள் மற்றும் பிற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையாகும். இன்று இணையத்தில் நாம் காணக் கூடிய பெரும்பாலான வலை பக்கங்கள், மென்பொருள்கள், ஆட்டோமேஷன் வகையைச் சார்ந்தவையாகும்.

"வணிகச் செயல்முறை ஆட்டோமேஷன்' என்பது வணிகச் செயல்முறைகளைச் சீராக்கும் ஓர் உயர் மட்ட உத்தியாகும். இது வணிகத்தில் உள்ள அனைத்து செயல்முறைகளையும் முறைப்படுத்தி, அவற்றை ஆட்டோமேஷன் மென்பொருளுடன் ஒருங்கிணைப்பதாகும். இதைச் செயல்படுத்தும் போது வணிகம் வியக்க வைக்கும் அளவுக்கு மேம்பட வாய்ப்புள்ளது. ரோபோட்டிக்ஸ் செயல்முறை என்பது மென்பொருள் ரோபோக்களை குறிக்கிறது. இவை கணினியின் மென்பொருள் இயக்கத்தை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. தற்போது உள்ள சூழ்நிலையில் அவற்றைக் கொண்டு கணினியின் செயல்முறைகளை ஒருங்கிணைப்பது எளிதாகும். நுண்ணறிவுச் செயல்முறை ஆட்டோமேஷன், கணினி நிரலைப் பயன்படுத்தும் போது மனிதர்கள் எவ்வாறு பணிகளைச் செய்கிறார்கள் என்பதை அறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் மனிதர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கலாம். தொழிற்துறை ஆட்டோமேஷன் என்பது இயந்திர ரோபோக்கள் மற்றும் சிறப்பு கட்டுப்பாடு அமைப்புகளைப் பயன்படுத்தி தானிங்கி முறையில் செயல்படும் இயந்திரங்களைக் குறிக்கிறது. தொழில் துறை ஆட்டோமேஷனில் ரோபோக்கள் மனித உழைப்பை தானியங்கிமயமாக்குவதற்கு நெகிழ்வான வழி முறைகளைப் பயன்படுத்துகிறது. இந்த வகை ரோபோக்கள் மனிதனை விட திறமையாகப் பணியைச் செய்யத் தயங்குவதில்லை. ஆட்டோமேஷன் மற்றும் ரோபோட்டிக்ஸ் பற்றி நாம் பேசும் போது, பொதுவாக தொழில்துறை ஆட்டோமேஷன் எனக் குறிப்பிடுகிறோம். தொழில்துறை ஆட்டோமேஷன் என்பது இயங்கும் செயல்முறைகளைக் கட்டுப்படுத்துவதாகும். ஒரு தொழில்துறை செயல்முறைக்குள் பணிகளைத் தானியங்கிமயமாக்குவதற்கு மென்பொருள் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைப் பயன்படுத்துவது இதில் அடங்கும். ஒரு முழுமையான தானியங்கி தொழிற்சாலையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது தீப்பெட்டி தயாரிக்க முழுக்க முழுக்க தானியங்கி இயந்திரங்கள் வந்துவிட்டன. இதுபோன்று மேலும் பல தானியங்கி ஆலைகள் உள்ளன. ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய இரண்டும் பின்னிப் பிணைந்து உள்ளன. ஆனால் அவை ஒரே மாதிரியானவை அல்ல. இயந்திர ரோபோக்கள் ஆட்டோமேஷன் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தலாம். ஆனால் பல ரோபோக்களில் ஆட்டோமேஷன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை. தானியங்கி ரோபோக்களில் எல்லா நேரங்களிலும் ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக ஒரு ரோபோ தன்னிச்சையாக ஒரு பாதையையோ அல்லது கோட்டையோ பின்தொடரலாம். ஆனால் அதற்கு ஆட்டோமேஷன் தேவைப்படாது. ஏனெனில் அது ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யவில்லை. ஆனால் ஒரு ரோபோ மருத்துவமனையில் மருந்துகளை தூக்கிச் சென்றால் அதற்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் தேவைப்படும். வரும்காலங்களில் தொழிற் சாலைகளில் புதிய தொழில்நுட்பத்தில் உற்பத்தியை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் படிப்பு மிகவும் அவசியம் தேவை. இதனால்தான் இந்த பொறியல் படிப்புக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த கருத்தினை உலகப் பொருளாதார மையம் அறிவித்துள்ளது. எங்கள் கல்லூரியில் இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழுவின் அனுமதி பெற்று தொடங்கப்பட்டு உள்ளது. சவாலாகவும், புதிய சிந்தனையுடனும் உள்ள இந்த பொறியியல் படிப்பை படித்தால் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு, வாழ்கை வளமாகும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது'' என அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews