மாணவர்களுக்கு வீடுதேடி சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

மாணவர்களுக்கு வீடுதேடி சென்று பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளியில், வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் கள ஆய்வு செய்தனர்
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் கல்வி பாதிக்கப் படாமல் இருக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இணைந்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் அறிவுறுத்தலின் பேரிலும், குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மற்றும் கோத்தகிரி வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் வழிகாட்டுதல் படியும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், உதவி ஆசிரியை அனிதா மாலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மாணவர்கள் கண்டு பயன்பெறுவது குறித்து வீடுதோறும் களப்பார்வை இட்டு வருகின்றனர்.

அதோடு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில ஆன்லைன் வகுப்புகள் நடத்திவரும் பட்டதாரி ஆசிரியை மல்லிகா குமார் மற்றும் வாட்ஸ்அப், யூடியூப் காணொலிகள் மூலமாக கல்வி போதித்து வரும் ஆசிரியைகள் ரோஸ்லீன்,ராபியா, தனலட்சுமி, சுமித்ரா ஆகியோரின் ஒப்படைப்புகளை பார்வையிட்டு திருத்தம் செய்து , மாணவச் செல்வங்களுக்கு அறிவுரைகள் கூறி வழிகாட்டி வருகின்றனர். கல்வித்துறை வழங்கியுள்ள கல்வி ஒளிபரப்பு சார்ந்த கால அட்டவணை குறித்து பெற்றோரிடத்து நேரிடையாக கூறி ஆலோசனைகள் வழங்கியும் வருகின்றனர்.
மேலும் அரசின் சுற்றறிக்கை படி கணினி,ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி பெட்டிகள் ஆகியன இல்லாத மாணவர்கள் கணக்கெடுப்பினையும் செய்து வட்டார வள மையத்திற்கு புள்ளிவிவரம் வழங்கி வருகின்றனர். இவ்வாறு பள்ளி மாணவர்களுடன் அன்றாடம் இணையவழி, புலனம் கைப்பேசி மற்றும் நேரிடையாக தொடர்பு கொண்டு தகவல் தொடர்பும் போக்குவரத்து வசதியும் குறைவாக உள்ள மலைமாவட்ட, ஏழை பின்தங்கிய தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் கல்வித் தரத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் அக்கறையுடன் செயல்படும் குண்டாடா அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகளின் செயல்பாடுகளை பெற்றோர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை குண்டாடா அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews