பள்ளிகள் திறப்பதில் வினோத சிக்கல்: அடம் பிடிக்கும் ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

பள்ளிகள் திறப்பதில் வினோத சிக்கல்: அடம் பிடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் திறப்பதில் வினோத சிக்கல்: அடம் பிடிக்கும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள அடுத்த கட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து, வணிக அங்காடிகள் என அனைத்தும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

இது குறித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்கள், பெற்றோர் பிரதிநிதிகள், மாணவ பிரதிநிதிகள், கல்வித் துறை மற்றும் மருத்துவ வல்லுனர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார் அவர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளிகளில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வந்துகொண்டிருந்தனர். எனினும், தற்போது ஆசிரியர்கள் அனைவரும் தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளிகளுக்கு வந்து ஆன்லைன் முறையில் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பினர்.

தற்போது ஊரடங்கில் (Lockdown) பல வித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை, புதிய கல்வியாண்டுத் துவக்கம் என பலவித பணிகள் துரித கதியில் நடக்கத் துவங்கியுள்ளன. ஆகையால் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பல ஆசிரியர்கள் இதற்கு தயாராக இல்லை. ஆசிரியர்கள் கட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ ஆசிரியர் சங்கத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று இன்னும் முழுவதுமாக சரியாகாத நிலையில், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என இந்த அமைப்பு வலியுறுத்தி வருகின்றது. எனினும், இதற்கு பள்ளிக் கல்வித்துறை ஒப்புக்கொள்வதாக இல்லை. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்கள் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கிவிட்டன. பள்ளிக் கல்வி அலுவலகங்களிலும் அனைத்து ஊழியர்களும் தினமும் பணிக்கு வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் இதில் விலக்களிக்கக் கோருவது ஏற்புடையதல்ல என்று பள்ளிக்கல்வித் துறை கருதுகிறது. மேலும், சுழற்சி முறையில் மட்டுமே பள்ளிக்கு வர முடியும் என கூறும் ஆசிரியர்களுக்கு அந்த நாட்களுக்கான ஊதியத்தை மட்டும் அளித்தால் ஒப்புக்கொள்வார்களா என்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை காட்டமாக கேட்டுள்ளது.

ஆசிரியர்கள் (TN School Teachers) இப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பிற வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

மாணவர்கள் எப்போது பள்ளிகள் திறக்கும் என ஆவலாக காத்திருக்கும் வேளையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மறுப்பது வினோதமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews