ஆன்லைன் கல்வியை கருத்தில்கொண்டு பராமரிப்புக்கான மின்தடை நேரம் குறைப்பு - மின்சார வாரியம் நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

ஆன்லைன் கல்வியை கருத்தில்கொண்டு பராமரிப்புக்கான மின்தடை நேரம் குறைப்பு - மின்சார வாரியம் நடவடிக்கை

ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர், வீட்டில் இருந்து பணியாற்றுவோரின் நலனை கருத்தில் கொண்டு மாதாந்திர பராமரிப்புக்கான மின்தடை செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழுது ஏற்பட்டு திடீரென மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். வார நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளில் முன்னறிவிப்புடன் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படும். இதற்காக காலை 9 முதல் மாலை 5 வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் மின்தடை செய்யப்படும்.இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடம் எடுக்கின்றனர். வீடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இதேபோல் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது பணியாளர்களை வீடுகளில் இருந்து பணியாற்றும்படி கூறியுள்ளது. இதையடுத்து தங்களது நிறுவனங்களின் தலைமை கூறியுள்ளபடி வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். முன்னதாக பெரும்பாலான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் முதல் அலை முதலே வீடுகளில் இருந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு படிப்பது, பணி செய்வது உள்ளிட்ட இன்ன பிற செயல்களுக்கு மின்சாரத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே எவ்விதமான தடையும் இல்லாமல் தமிழகம் முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாதாந்திர பராமரிப்புப் பணி அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே அதனை மேற்கொள்வதால் வீடுகளில் இருந்து படிப்போர், பணிபுரிவோருக்கு சிக்கல் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில், மிகவும் குறுகிய நேரத்துக்குள்ளாகவே பராமரிப்புப் பணிகளை முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே சென்னையில் நடக்கும் பராமரிப்புப்பணியின் போது மின்தடை செய்யப்படும் நேரம் குறைந்தபட்சமாக 5 மணி நேரமாக குறைக்கப்பட்டிருந்தது. இது தற்போது 2 மணி நேரமாக, அதாவது காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை என்றளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த நேரமானது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. அந்தந்த பகுதிகளின் பராமரிப்புப் பணிக்கேற்ப நேரமும் மாறுபடும். இவ்வாறு தமிழகம் முழுவதும் மக்களின் நலன் கருதி, மின் தடை செய்யப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தடையற்ற மின்சாரம்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது சிகிச்சைக்கு மின்சாரம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையமோ, மருத்துவமனையோ இருந்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நேரம் 2 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மின்தடை செய்யப்படும் நேரம், 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேக அட்டவணையும் தயார் செய்யப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews