'ஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 22, 2021

Comments:0

'ஆசிரியர் பணியே கடினமானது' - ஆய்வில் தகவல்.

பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
எதிர்காலத் தலைவர்களை/தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கைவிட ஆசிரியர்களின் பங்கு அதிகமானது. சிறு வயதில் குழந்தைகளை செதுக்கி அவர்களின் திறனுக்கேற்ப வடிவமைக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வி சிறந்ததாக இருந்தால் அந்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பொதுவான கருத்தும் உண்டு. அத்தகைய ஆசிரியர்களின் பணி குறித்து யு.சி.எல். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஆக்ஸ்போர்டு ரிவியூ ஆஃப் எஜுகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்று ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ல் 9 பங்கு உழைப்பினை கொடுக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 54% என்ற அளவில் இருந்த உழைப்பு தற்போது 94% ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியர்களை அடுத்து சுகாதாரப் பணியாளர்களும், சட்ட வல்லுநர்களும் அதிகம் உழைக்கின்றனர். இதில் உழைப்பு என்பது பணியிடத்தில் மட்டுமின்றி அவர்களின் பணி சார்ந்த மற்ற வேலைகளும் அடங்கும். யு.சி.எல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் கிரீன் கூறுகையில், 'ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில் அவர்களின் நல்வாழ்வு குறைந்துவிட்டது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களின் செல்வாக்கு குறைந்துவிட்டது. எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களின் பிரச்னைகளை களைய வேண்டியது நம் கடமையாகும். பிற தொழில்களோடு ஒப்பிடும்போது, ​​ஆசிரியர்கள் மிகவும் தீவிரமாக வேலை செய்வது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு பிந்தைய சூழலில் ஆசிரியர்களின் பணி சவாலானதாகவே இருக்கும். அதேநேரத்தில் இந்த ஆய்வின் முடிவுகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், கற்பித்தல் தரத்தை அதிகம் நம்பியுள்ள மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்று தெரிவித்தார். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என்பது பொதுவாக பணி நேரமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் குறைவான நேரம் பணியில் இருந்தாலும் அதற்கு பின்னால் அவர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்று கூறுகிறது இந்த ஆய்வு. பள்ளி ஆசிரியர்கள் எம்மாதிரியான பணிகளை எல்லாம் மேற்கொள்கிறார்கள்? அவர்களின் திறன்கள், பணியில் திருப்தி, மாணவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 முதல் 60 வயது வரையிலான 857 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, மற்ற தொழில் செய்பவர்களைவிட ஆசிரியர்கள் இரு மடங்கு மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தங்கள் திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்கிறனர் என்று கூறப்பட்டுள்ளது. நன்றி - தினமணி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews