அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 22, 2021

Comments:0

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் வரை பதவி உயர்வு பெற வாய்ப்பு

யுஜிசி நெறிமுறை 2018-ஐ அமல்படுத்தும் அரசாணையால், அதிகபட்சமாக இணைப் பேராசிரியர் பதவியுடன் ஓய்வு பெற்று வந்த அரசுக் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி, 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:
’’தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. பல்கலைக்கழக மானியக்குழு நெறிமுறைகள் 2018-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கழகம் வலியுறுத்தி வந்தது. இந்நெறிமுறைகளை அமல்படுத்தும் வகையில், உயர் கல்வித்துறை ஓர் அரசாணையை (எண். 5) அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், கல்லூரி ஆசிரியர்களுக்கான தர ஊதிய உயர்வு ஊதிய அட்டவணை 10-11-க்கு ரூ.6,000 - ரூ.7,000, ஊதிய அட்டவணை 11-12-க்கு ரூ.7,000 - ரூ.8,000 இணைப் பேராசிரியர்களுக்கான ஊதிய அட்டவணை 12-13ஏ-க்கு ரூ.8,000 - ரூ.9,000, ஊதிய அட்டவணை 13ஏ-14-க்கு ரூ. 9,000 - ரூ.10,000 ஆகிய பணி மேம்பாடுகள் கிடைக்கும். இத்துடன் எம்.ஃபில்., பிஎச்.டி. ஊக்க ஊதிய உயர்வும் இந்த ஆணையின் மூலமாகக் கிடைக்கும். கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஆயிரக்கணக்கான அரசு மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான பல்வேறு நிலைகளுக்கான பணி மேம்பாடு 1.4.2015 முதல் பணிப்பயனாகவும், 1.8.2018 முதல் பணப்பயனாகவும் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் பணி மேம்பாடு பெறுவார்கள். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றினால், இணைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முடியும். இந்த ஆணையால் இணைப் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றுபவர்கள், பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற முடியும். இதன்மூலம் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் பயனடைவர். மேலும், கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி, தேர்வு, பணி மேம்பாடு, கல்லூரி முதல்வர்களுக்கான தகுதி, பணி ஓய்வு வயது வரம்பு போன்றவை குறித்த நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம், கல்லூரிகளில் ஆசிரியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர், முதல்வர் பணி நியமன நெறிமுறைகள், கல்லூரியின் வேலை நேரம், ஆசிரியர் மாணவர் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவை குறித்த நெறிமுறைகளும் இந்த ஆணையில் வகுக்கப்பட்டுள்ளன. இது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாகும். இதற்குத் தமிழக முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர், உயர் கல்வித்துறைச் செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது’’. இவ்வாறு த.வீரமணி கூறினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews