தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களே அதிகம் பேர் தேர்ச்சி: கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும் மருத்துவ படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களே அதிகம் பேர் தேர்ச்சி: கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும் மருத்துவ படிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகி வரும் சூழ்நிலையில், இந்தாண்டும் நீட் தேர்வில் லட்சக்கணக்கில் பணத்தை தனியார் பயிற்சி மையத்தில் கொட்டி கொடுத்து படித்த மாணவர்களே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற பகீர் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. மாநில கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து தேர்ச்சி பெறுவது கடினம். மேலும், இதற்காக, நீட் பயிற்சி வகுப்பு என்று பணம் மற்றும் நேரத்தை தமிழக மாணவர்கள் செலவிட்டு செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு என்றே இதற்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போல நாடு முழுவதும் முளைத்துள்ளன. இந்த மையங்களில் பயிற்சிக்கு சேர லட்சக்கணக்கில் பணம் கட்டணம் தர வேண்டியுள்ளது. பண வசதி படைத்தவர்களால் மட்டுமே இவ்வளவு பெரிய ெதாகை கொடுத்து நீட் பயிற்சி வகுப்புக்கு செல்ல முடியும். ஆனால், ஏழை, எளிய மாணவர்கள் இது போன்று நீட் பயிற்சி வகுப்பு செல்வது என்பது கனவாகவே இருக்க முடியும். இதனால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடியாத நிலை தான் தற்போது வரை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2018ல், தமிழகத்தில் 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில், 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 9,154 பேர். அதில் தகுதிபெற்றவர்கள் 1,337 பேர். இதை தொடர்ந்து, கடந்த 2019 தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,23,078 பேரில், 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 17,630 பேர் தேர்வு எழுதினார். அதில் தகுதிபெற்றவர்கள் 2,557 பேர். இதில் 4 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் நீட் தேர்வில் பெற்றுள்ளனர். ஆனாலும் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை. தமிழக அரசு சார்பில் 412 நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி அளித்தும் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே நிலைமை தான் நடப்பாண்டிலும் உள்ளது. தனியார் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மற்றும் அரசின் நீட் பயிற்சி மையகளில் படித்த மாணவர்கள் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மொத்தம் 1.21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் என 1615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44ஆக உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களில் 48.57% பேர் தேர்ச்சி பெற்றனர். 2019யை காட்டிலும் இந்த ஆண்டு 8.87 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இதில், தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படித்த மாணவர்கள் தான் அதிகம். ஆனால், அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்து விட்டதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் 12ம் வகுப்பு படித்துவிட்டு ஓராண்டு தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பணத்தை கொட்டி கொடுத்தவர்கள். இதில், பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் படித்த மாணவர் ஜீவித் குமார் என்ற மாணவரும் தனியார் நீட் பயிற்சி வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர் தான். இந்த மாணவர் 720க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சாதனையை படைத்தார். இந்த மாணவர் ஓராண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கோச்சிங் சென்றார். அந்த மாணவர், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க ஆசிரியர்கள் உதவியுள்ளனர். அவர்கள் செய்த உதவியின் காரணமாக இந்த மாணவர் அதிக மதிப்பெண் பெற்றார். இதன் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களாலும் வெற்றி பெற முடியும் என்ற நிலை இந்த மாணவர் ஏற்படுத்தியிருந்தாலும், அனைவருக்கும் இந்த மாணவரை போன்று உதவி கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. ஆனால், அந்த மாணவர் நீட் தேர்வில் எப்படி இவ்வளவு மதிப்பெண் பெற்றார் என்பதை மறைத்து, அதற்கு பின்னணியில் எத்தனை பேர் உதவி உள்ளனர். அவர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா என்பன போன்ற உண்மையான விஷயங்களை வெளியில் கொண்டு வராமல் இந்த அரசு பள்ளி மாணவர் போன்று தேர்ச்சி பெற வேண்டும் என்கிற பொய்யான பிரச்சாரத்தை சிலர் செய்கின்றனர். தற்போது, தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்தால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருப்பதே மிகவும் மோசமான நிலை. கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து நீட் தேர்வு எழுத தனிப்பயிற்சி பெற முடியாத நிலையில், மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக தான் உள்ளது. இதற்கு, முடிவு கட்ட அனைவருக்கும் அரசே நீட் தேர்வுக்கான தரமான பயிற்சியை வழங்க வேண்டும். அதாவது அரசு நீட் தேர்வுக்கு என்றே ஒரு பிரிவை ஆரம்பித்து கட்டணம் இல்லாமல் தனியார் தரும் அதே பயிற்சியை 9ம் வகுப்பில் இருந்து கொடுக்க ஆரம்பித்தால் அவர்கள் டாக்டர் ஆவது எளிதாக இருக்கும். தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருப்பதே மிகவும் மோசமானதாகும். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்பதால் வாய்ப்புகளும் பொதுவானதாக இருக்க வேண்டும். தற்போது, அரசு பள்ளி மாணவர்கள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அண்மையில் சட்டம் கொண்டுவந்தது. ஆனால் இன்று வரை இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு துணிந்து செயல்பட்டால் மட்டுமே இந்தாண்டாவது கொஞ்சம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும். இல்லாவிட்டால் அதுவும் சாத்தியம் இல்லாமல் போய்விடும். இது குறித்து தனியார் பயிற்சி நிறுவனத்தில் கோச்சிங் படித்து தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் கூறுகையில், எனது சொந்த ஊர் டி.வாடிப்படி. எனது அப்பா பெயர் நாராயணமூர்த்தி, அவர், சென்னையில் உள்ள ஜூஸ் கடையில் வேலை செய்தார். தற்போது கொரோனா காரணமாக வேலையில்லாததால் சொந்த ஊருக்கு வந்து விவசாயத்தை கவனித்து வருகிறார். அம்மா பரமேஸ்வரி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்கிறார். நான் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதினேன். இந்த தேர்வில் என்னால் 193 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. இதனால், நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டரில் சேர முடிவு செய்தேன். ஆனால், அதற்கு பணம் இல்லாத நிலையில், நான் படித்த சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் நிறைய உதவி செய்துள்ளனர். கோச்சிங் சென்டரில் இருந்து உதவி செய்தனர். ஆசிரியர் சபரிமாலாவும் உதவி செய்தார். எல்லோரும் எனக்காக உதவி செய்தனர். இந்த கஷ்டகாலத்திலும் நீட் ேதர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில் ேசர்ந்து படிப்பதற்காக என்னுடைய பெற்றோர் ₹50 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தினர். அனைவரது உதவியால் தான் சாதனை படைக்க முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள்? தமிழகத்தைப் பொறுத்தவரை 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒரு அரசு பிடிஎஸ் கல்லூரி உள்ளது. 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், 28 தனியார் பிடிஎஸ் கல்லூரி உள்ளன. அரசு கல்லூரிகளில் 3,250 எம்பிபிஎஸ் இடங்களும், 100 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,600 எம்பிபிஎஸ் இடங்களும், 2,760 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews