ஆன்ட்ராய்டு மொபைல் இல்லை, இன்டர்நெட் வசதியில்லை: ஆன்லைன் கல்வியால் அவதிப்படும் பெற்றோர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 22, 2020

ஆன்ட்ராய்டு மொபைல் இல்லை, இன்டர்நெட் வசதியில்லை: ஆன்லைன் கல்வியால் அவதிப்படும் பெற்றோர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எதிர்கொள்ளும் பிரச்னைகளை அலசும் மாணவர்கள் * சிக்கலை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் எதிர்ப்பு
வேலூர்: உலகின் சுழற்சியையே திருப்பி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லா துறைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு என்பது ஒட்டுமொத்தமாக மக்களின் வாழ்வாதாரத்தையே அசைத்துள்ளது. இதில் இளையசமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வித்துறை முடக்கம் நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒருபுறமும், ஆன்லைன் மூலம் கல்வி வழங்க வேண்டும் என்று மறுபுறமும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. சமூக இடைவெளி, தனி நபர் இடைவெளி என்பது சிக்கலை உருவாக்கும் என்பதால் அதை பள்ளிகள் திறப்பதற்கான தடைக்கல்லாக தமிழக அரசு கருதுகிறது. அதற்கேற்ப எங்களுக்கு மாணவர்களின் உடல்நலன் தான் முக்கியம் என்பதையும் வலியுறுத்தி கூறி வருகிறது தமிழக அரசு. இதனால் கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் கற்பித்தல் போன்ற நடைமுறையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. அதற்கேற்ப ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக மாநிலத்தில் 60 சதவீதம் தனியார் சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி விட்டன. அதிலும் எல்.கே.ஜி மாணவர்களுக்குக் கூட ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. பள்ளிக்கு சென்று சக மாணவர்களுடன் பழகி செயல்முறை கல்வி கற்ற மாணவர்களை ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஒரு செல்போனுக்கு முன்பு கட்டிப்போட்டுள்ளது. ஆன்லைன் கல்விக்கு தேவையான வசதிகளை பெறுவதில் இன்னமும் அடித்தட்டு, நடுத்தர வர்க்க பிள்ளைகளுக்கு கனவாகவே உள்ள நிலையில் இது எந்த வகையில் சாத்தியம் என்பது தெரியவில்லை. தற்போதைய நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் 30 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பயன்பெறுகின்றனர். அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் 70 சதவீத மாணவர்கள் ஆன்ட்ராய்டு மொபைல் போன் இல்லாமலும், தொலைதொடர்பு வசதி இல்லாமலும் ஆன்லைன் வகுப்பு என்றால் என்ன என்றே தெரியாமல் உள்ளனர். ஆன்லைனில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களும் கவனத்தை சிதறவிடுகின்றனர். சிலர் புரியவில்லை என்று பெற்றோரை குறிப்பெடுக்க வைக்கின்றனர். இதனால் பெற்றோரும் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஓரளவு வசதிப்படைத்த, பெருளாதார வசதி உறுதி செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு ஆன்லைன் கல்வி முறை 100 சதவீதம் பலன் தருமா என்பதும் கேள்விக்குறியே. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களை பொறுத்தவரை பல பிரிவுகளாக பிரிக்கலாம். பாடம் சொல்லி கொடுக்கும்போதே புரிந்து கிரகிக்கக்கூடிய திறன் வாய்ந்தவர்கள், ஒருமுறைக்கு இருமுறை கற்பிக்கும்போது புரிந்து கொள்ளக்கூடியவர்கள், சில மாணவர்களுக்கு பலமுறை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில்தான் மாணவர்கள் உள்ளனர். நமது கல்விமுறையும் அதற்கு தகுந்தபடியே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்க முடியும். அவர்களும் பாடங்களை புரிந்து கொள்ள முடியும். ஆனால் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்பது சிக்கல்தான். நிச்சயம் பாடங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தற்போதைய சூழலில் தினமும் 4 மணி நேரம் வரை சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கிறார்கள். மேலும் கால அட்டவணை போட்டு, காலை முதல் மாலை வரை மாணவர்கள் மொபைல் போன், கம்ப்யூட்டர், டேப்லெட் முன்பு உட்கார வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நிலையில், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம். மீண்டும் எப்போது பள்ளி திறந்தாலும் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் எல்லா மாணவர்களுக்கும் ஒரே முறையில் ஆன்லைனில் பாடம் எடுப்பது சரியான வழியல்ல. அதற்கு பதில் ஆசிரியர்கள் பாடத்தை வீடியோ பதிவாக ரெகார்ட் செய்து அதன் லிங்க்குகளை பெற்றோருக்கு அனுப்பலாம். அதன் மூலம் மாணவர்கள் பாடம் புரியும் வரை பல முறை அதனை போட்டு பார்ப்பார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் பார்ப்பார்கள். அதேநேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் என்பது வெளித்தோற்றத்துக்கு நன்றாக தெரியும். ஆனால், நடைமுறையில் இது அதிக சிக்கலையே ஏற்படுத்தும். அதேநேரத்தில் ஆசிரியர்கள் தரப்பும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதில் சிக்கலை சந்திப்பதாக நிறைய புகார்கள் வருகிறது. பல மாணவர்களை ஒரு மொபைல் போனில் கட்டுப்படுத்துவது இயலாத விஷயம். அதேபோல் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது’ என்றார். ஆன்லைன் வகுப்பை எதிர்கொள்ளும் தனியார் பள்ளி மாணவர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘போனில் சிக்னல் இல்லாமல் சில சமயம் அப்படியே நின்றுவிடும். கணக்கு பாடம் எல்லாம் புரியாது. ஒரே சத்தமாக இருக்கும். நிறைய பேர் ஒரே லைனில் இருப்பார்கள். சிலர் மியூட் போடாமல், அவர்களின் ஆடியோவை ஆன் செய்து விடுவர். பள்ளி சீக்கிரம் திறக்க வேண்டும். ஆன்லைன் கிளாஸ் ஒன்றும் புரியவில்லை. இதில் அதிக ஹோம் வொர்க் கொடுக்கிறார்கள். அதை வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும். இதில் நண்பர்கள் யாராவது வீடியோ ஆன் செய்தால் அவ்வளவுதான். ஆகவே பள்ளிகளை சீக்கிரம் திறந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என்றனர். பள்ளி மாணவர்களுக்கு எத்தகைய கல்வி சூழலை கொடுக்கிறோம் என்பது தான் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். கிராமப்புற மாணவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிலைகளை கருத்தில் கொண்டு, பள்ளிகள் ஆக்கப்பூர்வமாக எப்படி மாணவர்களின் சிந்தனையை தூண்ட வேண்டும் என்று யோசிப்பதுவே நல்ல வளர்ச்சியை கொடுக்கும். அதற்கேற்ப அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு. * இந்த கல்வியாண்டை மறந்துவிடலாம் இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘பொதுவாக மொபைலில் கேம் மற்றும் யூடியூப் வீடியோக்களையே பார்ப்பார்கள். அவர்களை வகுப்புகளை கவனிக்க சொன்னால், கொஞ்சம் நேரத்தில் அந்த ஆப்பில் இருந்து வெளியே வந்து யூடியூப் வீடியோ பார்க்க சென்று விடுகின்றனர். அதோடு ஆன்லைனிலேயே வீட்டுப்பாடம் வேறு கொடுத்தனர். ஆனால் நிச்சயம் ஒன்றை என்னால் உறுதியாக கூற முடியும். என் குழந்தைகளுக்கு ஆன்லைனில் ஆசிரியர்கள் நடத்திய பாடம் புரியவில்லை. இந்த கல்வி ஆண்டு ஏறத்தாழ 3 மாதங்களை கடந்து விட்டது. கொரோனா பிரச்னை எப்போது தீரும் என்பதும் தெரியவில்லை. அதனால் இந்த கல்வி ஆண்டை மறந்து விடலாம். அதற்கேற்ப அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களை வடிவமைத்து மாணவர்களை தயார்படுத்தலாம். வகுப்பறை கற்பித்தலை விட சிறந்த ஒன்று இருப்பதாக தெரியவில்லை. கல்வி என்பது பாடநூல்களிலும், வகுப்பறையிலும் மட்டுமே இல்லை. இந்த தடை காலத்தை அனுபவ கல்வி பெற மாணவர்களை ஊக்குவிக்கலாம். வீட்டு வேலைகள், சமையல், மரபு சார்ந்த தொழில்கள், கைவினைக்கலைகள், கலை வடிவங்கள், விவசாயம் ஆகியவற்றை பற்றி மாணவர்களை எழுதியோ, பதிவு செய்ய வைத்தோ பள்ளி திறக்கும் போது கொண்டுவரச் சொல்லலாம். அவர்களின் மற்ற திறன்களை வளர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளலாம்’ என்றனர். * ஆன்லைன் கல்வி சரிவராது தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ‘நிச்சயம் வகுப்பறை கல்விபோல ஆன்லைன் கல்வி வராது. அதுவும் இன்றைய சூழலில் மொபைல், கணினி மூலம் ஆன்லைன் கல்வி என்றால் மாணவர்கள் திசை மாறும் நிலை உள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலன், எதிர்காலம் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews