பேராசிரியர் ஆ ஹுமாயூன் கபீர்: கலைந்துபோன கல்விக் கனவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 18, 2020

Comments:0

பேராசிரியர் ஆ ஹுமாயூன் கபீர்: கலைந்துபோன கல்விக் கனவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை’ நூலில் இடம்பெற்றிருந்த ஒரு கடிதம் கவனம் ஈர்த்தது. கலைக்களஞ்சியப் பணிகளுக்காக அளிக்க ஒப்புக்கொண்ட ஆண்டு நிதிநல்கையை நினைவூட்டி தி.சு.அவினாசிலிங்கம் 1949-ல் அன்றைய மத்திய கல்வித் துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதம் அது. அப்போதைய கல்வியமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் என்றாலும் அந்தக் கடிதம் அவரது தனிச்செயலாளராகவும், பின்பு கல்வி அமைச்சக அதிகாரியாகவும் பணிபுரிந்த ஹுமாயூன் கபீருக்கு எழுதப்பட்டிருந்தது. அலுவல் முறையில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் இப்படி முடிந்திருந்தது: ‘நீங்கள் நலந்தானே! சென்னையில் தங்களை எப்போது எதிர்பார்க்கலாம்?’ இஸ்லாமியரான ஹுமாயூன் இந்து மதத்தைச் சேர்ந்த சாந்தியை மணந்துகொண்டவர். அவர்களின் மகள் லீலா, ஜார்ஜ் பெர்னாண்டஸைத் திருமணம் செய்துகொண்டார். சாந்தி, சென்னையின் பொதுக் கல்வித் துறை இயக்குநராகப் பணியாற்றிய பி.பி.டேவின் நெருங்கிய உறவினர் என்பதால் ஹுமாயூன் சென்னை வந்துசென்றிருக்கக் கூடும். அவினாசிலிங்கம் எதிர்பார்த்தபடி மத்திய கல்வித் துறை அமைச்சகத்திடமிருந்து எந்த நிதியுதவியும் வந்துசேரவில்லை. ‘சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுகள், பருவமழை பொய்த்ததாலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாலும் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, இந்திய வரலாற்றிலேயே அதற்கு முன் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியதாக இருந்தது’ என்று ஹுமாயூன் கபீர் தன்னுடைய ‘எஜுகேஷன் இன் நியூ இந்தியா’ புத்தகத்தில் எழுதியதுதான் மத்திய கல்வித் துறை அமைச்சகம் கலைக்களஞ்சியத் திட்டத்துக்குக் கைவிரிக்கக் காரணம்.
அது ஒரு கனாக்காலம்
முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்காகப் பெரியளவில் நிதி ஒதுக்க முடியாமல் போனமைக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியே காரணம். ஆனால், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதைச் சரிசெய்துவிட முயன்றார் மௌலானா அபுல் கலாம் ஆஸாத். அந்தப் பொறுப்பை ஹுமாயூனிடம் ஒப்படைத்தார். காமராஜரின் ஆட்சிக் காலத்தில் பொதுக் கல்வித் துறை இயக்குநராக இருந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு. அவர், டெல்லியில் நடந்த பொதுக் கல்வித் துறை இயக்குநர்கள் மாநாட்டுக்குச் சென்ற அனுபவங்களைத் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். அந்த மாநாடு, கல்வித் துறை அமைச்சகத்தின் அப்போதைய ஆலோசகராக இருந்த ஹுமாயூன் கபீர் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு வந்திருந்த ஒவ்வொரு மாநிலத்தின் இயக்குநரோடும் உரையாடினார் ஹுமாயூன். அவர்கள் அனைவருக்குமே மாநாட்டில் பேசுவதற்கு வாய்ப்பளித்தார். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு கோரலாம் என்று முடிவெடுப்பதுதான் அந்த மாநாட்டின் நோக்கம். நிதியமைச்சக அதிகாரிகளின் எச்சரிக்கைகளையும்கூடப் பொருட்படுத்தாமல் கல்வித் துறை அதிகாரிகள் கனவுச் சிறகுகளை விரித்துப் பறக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வேண்டும், நாடு முழுவதற்கும் ஒரே கல்வித் திட்டம் பொருந்திவராது என்பதால் அதற்குரிய வகையில் விதிவிலக்குகளோடு திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. முடிவில், திட்டங்களுக்காக ரூ.1,200 கோடி வரையில் தேவைப்படலாம் என்று மதிப்பிடப்பட்டது. கூடவே, அரசு இந்த நிதியை ஒதுக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. ஹுமாயூன் கபீர், கல்வியமைச்சர் ஆஸாத்தைச் சந்தித்துப் பேசிவிட்டு, மறுநாள் மாநாட்டில் ‘ரூ.800 கோடிகளுக்குக் குறைந்தால் அந்தத் திட்டத்தைக் கல்வி அமைச்சகம் ஏற்காது என்று அமைச்சர் கூறினார்’ என்று பதிலளித்தார். அதிகாரிகள் மட்டுமல்ல; ஆலோசகர், அமைச்சர் என எல்லோரும் கல்வித் துறையின் மீது காட்டிய ஆர்வமும் அக்கறையும் அப்படிப்பட்டதாக இருந்தது. ஆனால், கடைசியில் ஒதுக்கப்பட்ட தொகை என்னவோ, ரூ.320 கோடி மட்டும்தான்.
லட்சியப் பயணத்தின் முதலடி
அரசே விரும்பினாலும் கல்வித் துறைக்குப் போதுமான அளவில் நிதி ஒதுக்க முடியாத நிலையில்தான் சுதந்திர இந்தியாவின் தொடக்க ஆண்டுகள் இருந்தன. ஆனாலும், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கவனக் குறைவோடும் அலட்சியத்தோடும் அணுகப்பட்ட கல்வித் துறையைச் சீரமைப்பதில்தான் இந்தியாவின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது என்று இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான ஆஸாத்தும், அவருக்கு ஆலோசகராக விளங்கிய ஹுமாயூனும் உறுதிபட எண்ணினார்கள். அவர்களது கனவையும் லட்சியத்தையும் ஹுமாயூன் கபீர் எழுதி 1955-ல் வெளிவந்த ‘எஜுகேஷன் இன் நியூ இந்தியா’ புத்தகத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் புத்தகத்தில் எடுத்தாளப்பட்ட தகவல்களுக்காக அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் நன்றி கூறியிருக்கிறார் ஹுமாயூன். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற அரசமைப்புச் சட்டத்தின் லட்சியத்தை நிறைவேற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் நான்கு முதல் ஐந்து மடங்கு வரை உயர்ந்தது. ஆசிரியர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகக் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கு வரவேற்புகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்வுகளில் பிரதமரும் கல்வியமைச்சரும் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் கூட்டங்களை இயற்கை எழில் சூழ்ந்த மலைவாசஸ்தலங்களில் நடத்தினார்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1947-48ல் 35 லட்சமாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை 1954-ல் 70 லட்சமாக இரட்டிப்பானது. பின்தங்கிய பிரிவினருக்கான உதவித்தொகை இதே காலத்தில் முப்பது மடங்கு உயர்ந்தது. கல்வித் துறை எப்போதும் மாநிலப் பட்டியலிலேயே இருக்க வேண்டும் என்றும் தொழிற்கல்வியின் உடனடித் தேவையின் காரணமாகவே மத்திய அரசு அதற்குக் கூடுதல் கவனம்கொடுப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் வெளியானபோது, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகப் பொறுப்புவகித்தார் ஹுமாயூன். தொடர்ந்து நேருவின் அமைச்சரவையில் விமானத் துறை அமைச்சராக இடம்பெற்றார். ஆஸாத்தின் மறைவையடுத்து ஹுமாயூனைக் கல்வி அமைச்சராக்கினார் நேரு. லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக் காலத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர். 1965-ல் அன்றைய சென்னை மாநிலத்தின் ஆளுநராக அவர் பொறுப்பேற்குமாறு இந்திரா கேட்டுக்கொண்டபோது அதை மறுத்துவிட்டார்.
பன்முக ஆளுமை
கல்வியாளர் என்பதைத் தாண்டி ஹுமாயூனுக்குக் கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் ஆகிய முகங்களும் உண்டு. தாகூர், சரத் சந்திரரைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் இளம் பத்திரிகையாளராகவும் தொழிற்சங்கவாதியாகவும் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவர். ஆந்திரம், கொல்கத்தா பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்பு மத்திய கல்வித் துறையின் ஆலோசகர், செயலாளர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், கல்வி அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆஸாத்தின் நண்பர், ஆலோசகர். ‘இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்’ நூல் ஆஸாத் வங்கத்தில் சொல்லச் சொல்ல, ஹுமாயூனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. கல்வித் துறை தொடர்பாக ஹுமாயூன் எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும் இன்று படிக்கிறபோது கல்வித் துறைக்கு சுதந்திர இந்தியா கொடுத்த முக்கியத்துவத்தை, நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளின் லட்சியக் கனவுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. கல்வியாளர்களே முன்னின்று கல்விக் கொள்கையை வகுக்க, அரசியல் தலைவர்கள் அதைப் பின்னின்று ஆதரித்த காலம் அது. இன்று கல்விக் கொள்கை என்பது தேர்தல் வாக்குறுதிகளில் மேலும் ஒன்றாகிவிட்டது. அரசு உயரதிகாரிகள் கல்விக் கொள்கையைப் பரிந்துரைக்க அதற்கான வரைவை அறிவியலாளர்கள் எழுதுகிறார்கள். அரசியலர்கள் பின்னணியில் சிரிக்கின்றனர்.
ஆகஸ்ட் 18: ஹுமாயூன் கபீர் நினைவு தினம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews