ஆயிரம் பக்கப் பாடத்திட்டக் கொடுமையிலிருந்து பள்ளிக் குழந்தைகளை மீட்போம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 02, 2020

Comments:0

ஆயிரம் பக்கப் பாடத்திட்டக் கொடுமையிலிருந்து பள்ளிக் குழந்தைகளை மீட்போம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா விளைவாக இந்த ஆண்டு பள்ளிக்கூடங்களின் திறப்பு தள்ளிப் போயிருக்கிறது. வரும் கல்வியாண்டில் கற்றல் நடக்கும் மாதங்கள் குறைவாக இருக்கும் என்பதால், பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பான விவாதம் உருவாகியிருக்கிறது. நிச்சயமாகப் பாடத்திட்டத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த வருடத்துக்கு மட்டும் அல்ல; எல்லா வருடங்களுக்குமே! மருத்துவ – பொறியியல் படிப்புகளுக்கான போட்டியும், ‘நீட்’ – ‘ஜேஇஇ’ நுழைவுத் தேர்வுகளின் பூதாகரமும் இந்தியப் பள்ளிக்கல்வியில் உண்டாக்கியிருக்கும் மோசமான தாக்குதலை இன்னும் இந்தியச் சமூகம் தீவிரமாகப் பேச ஆரம்பிக்கவில்லை. பத்தாண்டுகளுக்குப் பின் இதன் தீவிரம் நமக்குத் தெரியும். அதாவது, இன்றைய குழந்தைகள் மிக மோசமான பாதிப்புகளோடு வரும்போது சமூகம் அதுபற்றி விவாதிக்கலாம். ஆனால், கண் கெட்ட பிறகான சூரிய வழிபாட்டுக்கு அர்த்தம் ஏதும் உண்டா, என்ன? ஆயிரம் பக்கப் புத்தகச் சுமை இன்றைய பத்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கான புத்தகங்களின் அளவு உங்களுக்குத் தெரியுமா? தமிழ் - 273, ஆங்கிலம் - 220, கணிதம் - 352, அறிவியல் - 352, சமூக அறிவியல் 426. ஆக மொத்தம் 1,623 பக்கங்கள். பன்னிரண்டாம் வகுப்பில் இது மேலும் அதிகரிக்கிறது. தமிழ் – 227, ஆங்கிலம் 221, கணிதம் – 563, இயற்பியல் – 587, வேதியியல் – 614, உயிரியல் – 487. ஆக, மொத்தம் – 2,699 பக்கங்கள். முந்தைய தலைமுறை படித்ததைப் போன்ற சின்ன அளவிலான புத்தகங்கள் அல்ல இவை; அளவிலும் முழு நீளமானவை. அரசு தரும் புத்தகங்களிலேயே ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தது 25 கேள்விகளேனும் இருக்கும்; இன்னும் கேள்வி – பதில் துணைநூல்களில் உள்ள கேள்வி – பதில்களையும் சேர்த்தால், ஒவ்வொரு பரீட்சைக்கும் ஒரு குழந்தை குறைந்தது 1,000 முதல் 3,000 வரையிலான கேள்வி – பதில்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கினால், டிசம்பர் மாதத்துக்குள் இந்த முழுப் பாடத்திட்டத்தையும் பள்ளிக்கூடங்கள் முடித்தாக வேண்டும்; அதாவது, வெறும் ஏழு மாதங்களுக்குள். இன்னும் சொல்லப்போனால், வெறும் 175 நாட்களுக்குள் 2,699 பக்கங்களை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும். எத்தனை ஆசிரியர்களுக்கு இது முழுமையாகச் சாத்தியம் ஆகும்? மிக முக்கியமாக, மாணவர்கள் எந்த அளவில் இதை உள்வாங்கிக்கொள்ள முடியும்? ஆனால், இந்தக் கொடுமையை ஈவிரக்கமின்றி இன்று நாம் செய்துகொண்டிருக்கிறோம். இதோடு கூடவே, ‘நீட்’ – ‘ஜேஇஇ’ தயாரிப்புக்கான ஆயத்தம் என்ற பெயரில் அந்தத் தேர்வுகளின் பாடச் சுமையையும் திணிக்கிறோம். இது எங்கே போய் முடியும்? அனைவருக்கும் தேவையா? ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் சுமார் 9.5 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 4.5 லட்சம் மாணவர்கள் அறிவியல் பிரிவு, அதாவது மருத்துவத் தேர்வு எழுதுவதற்கான பிரிவைப் படித்துவருகிறார்கள். அதில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்த 2 லட்சம் மாணவர்களிலிருந்துதான் ஒரு ஆண்டுக்கான 7,000 மருத்துவ இடங்களின் ஆகப் பெரும்பான்மையான இடம் நிரப்பப்படுகிறது என்பதே உண்மை. அதாவது, இன்றைய தேதிக்கு அரசுப் பள்ளிகளிலிருந்து 10-20 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வதே அரிதாகிவிட்டது. மருத்துவப் படிப்புக்கான இடங்களை மட்டும் அல்ல; கடும் போட்டி நிலவும் உயர் கல்வி நிறுவனங்களின் பெரும்பான்மை இடங்களையும் இவர்களே நிரப்புகிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? தனியார் பள்ளிகள் மேம்பட்டவை – அரசுப் பள்ளிகள் மட்டம் என்றா? இல்லை. தனியார் பள்ளிகளிலிருந்து இப்படி உயர் கல்விக்கான வாய்ப்புகளைப் பிடிப்பவர்களில் ஆகப் பெரும்பாலானோர் அந்தந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கும் கூடுதலாகப் படிக்கிறார்கள்; இந்த வருஷம் இல்லையென்றால், அடுத்த வருஷம், அதற்கடுத்த வருஷம் என்று தொடர்ந்து தனிப் பயிற்சி மையங்களில் படித்து எழுதி ‘நீட்’ அல்லது ‘ஜேஇஇ’ போன்ற தேர்வுகளை வெல்கிறார்கள். இங்கே இரு கேள்விகள் முக்கியமானவை. ஒன்று, நுழைவுத் தேர்வும், தனிப் பயிற்சியும்தான் உயர் படிப்புகளுக்கான வழி என்றாகிவிட்டால், பள்ளிக்கூடங்களும், அது சார்ந்த தேர்வுகளும் எதற்காக? இரண்டாவது, இந்த நுழைவுத் தேர்வுகளின் பெயரால் கூடுதல் சுமையோடு மேம்படுத்தப்பட்ட நம்முடைய பாடப் புத்தகங்கள் எந்த அளவுக்கு மாணவர்களுக்குப் பலனளிப்பவையாக இருக்கின்றன? இன்று மத்தியக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடப் புத்தகங்களைக் காட்டிலும் மேம்பட்டவையாக நம்முடைய மாநிலக் கல்வி வாரியப் பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், மத்தியக் கல்வி வாரிய பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் திறன், குழந்தைகளின் பின்னணியோடு ஒப்பிட முடியாத அளவிலேயே மாநிலக் கல்வி வாரியத்தின் பள்ளிகள் கட்டமைப்பு, ஆசிரியர்கள் திறன், குழந்தைகளின் பின்னணி இருப்பதால், அவை முன்பைக் காட்டிலும் குழந்தைகளுக்குக் கூடுதல் சுமையாக மாறியிருக்கின்றன என்பதே உண்மை. இது வெறுமனே கல்வி சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல; வர்க்கம் சம்பந்தப்பட்ட விஷயமும் ஆகும். ஒரு கூலித் தொழிலாளியின் குழந்தைக்கு வீட்டிலுள்ள கற்றல் வாய்ப்பும், ஒரு அதிகாரியின் குழந்தைக்கு வீட்டிலுள்ள கற்றல் வாய்ப்பும் சமமானவை அல்ல. ஆனால், ஒரே தேர்வு எனும் போட்டியின் பெயரால் இருவருக்கும் சமமான சுமையை நாம் அளிக்கிறோம். மேலதிகக் கொடுமை என்னவென்றால், ஒன்பதரை லட்சம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள் என்றால், ஒன்பதரை லட்சம் பேரும் மருத்துவம் – பொறியியல் கனவுகளைக் கொண்டவர்கள் அல்ல. ஆனால், நுழைவுத் தேர்வு அரசியலை நாம் அரசியல் களத்தில் எதிர்கொள்வதற்குப் பதிலாகப் பாடப் புத்தகங்களின் வழி எதிர்கொள்ள முடிவெடுத்ததால், ஒன்பதரை லட்சம் பேருக்கும் சுமைகளை ஏற்றியிருக்கிறோம். விளைவாகவே புத்தகங்கள் இவ்வளவு பெருத்திருக்கின்றன.
அப்படியென்றால் என்ன தீர்வு? நம்முடைய பாடத்திட்டங்களின் அளவை ஒரு கல்வியாளர்கள் குழுவை அமைத்து முதலில் குறைக்க வேண்டும். புத்தகங்களின் பக்கங்கள் – முக்கியமாகத் தேர்வுக்கான கேள்வி – பதில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். ‘நீட்’ – ‘ஜேஇஇ’ போன்ற தேர்வுகளைத் தனிப் பயிற்சி வழியாகவே வெல்ல முடிகிறது என்பதை வெளிப்படையாக அரசு அறிவிக்க வேண்டும். இந்தத் தேர்வுகளை அரசியல் களத்தில் எதிர்த்து, கல்வியை முழுமை யாக மாநில அரசுகளின் அதிகாரத்துக்குக் கீழே கொண்டுவந்து, பள்ளிப் பாடத்திட்டத் தேர்வு அடிப்படையில் மாநிலத்தில் உள்ள உயர் படிப்புக்கான இடங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது நடக்கும்வரை மருத்துவம் – பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புக்குத் தயாராகும் மாணவர்களைத் தனியே பிரித்து அவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கான தனிப் பயிற்சியை அரசே முன்னின்று நடத்த வேண்டும். அதாவது, ‘பிளஸ் 2 தேர்வும், நீட் தேர்வும் ஒன்றல்ல’ என்ற உண்மையை அரசு வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவன்றி இப்போதைய நடைமுறை – அதாவது, சில ஆயிரம் பேர் தொழில் கல்விக்குச் செல்வதற்காகப் பல லட்சம் பேரையும் கடும் சுமையில் சிறு வயதிலிருந்தே வதைப்பது என்பதை – தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பெரும் விலையை அதற்குக் கொடுக்க வேண்டியிருக்கும். நம்முடைய குழந்தைகளை மன நோயாளிகளாக நாம் மாற்றிவிடுவோம்! 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews