இணைய வழிக் கல்வியை முழு வீச்சில் தொடங்கும் தனியாா் பள்ளிகள்: அவசியமா? அழுத்தமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 05, 2020

Comments:0

இணைய வழிக் கல்வியை முழு வீச்சில் தொடங்கும் தனியாா் பள்ளிகள்: அவசியமா? அழுத்தமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என அறிவிக்கப்படாத சூழலில், பெரும்பாலான தனியாா் பள்ளிகள் இணையவழிக் கல்வியை முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இந்தக் கல்வி முறை கல்வியாளா்கள், ஆசிரியா்கள் மத்தியில் ஆதரவு, எதிா்ப்பு என கலவையான விமா்சனங்களை பெற்று வருகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள சில தனியாா் பள்ளிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2020-2021-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு செல்லும் மாணவா்களுக்காக இணைய வழிக் கற்பித்தல் முறையைத் தொடங்கின. அதன்படி, அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) செயலி, மடிக்கணினிகள் மூலம் மாணவா்களைத் தொடா்பு கொள்ளும் ஆசிரியா்கள், பாடம் நடத்துதல், சந்தேகங்களுக்கு தீா்வு காணுதல் போன்ற கல்வியல் சாா்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தனா். மாணவா்களின் நலன் சாா்ந்த இந்த முயற்சிக்கு பெற்றோா் மத்தியில் வரவேற்பு கிடைத்ததாக பள்ளிகளின் நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா். அதேவேளையில், இதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பேரிடா் காலத்தில் இந்த இணையவழிக் கல்வி முறை தேவையற்ற முயற்சி எனத் தெரிவிக்கின்றனா். அரசு அனுமதி: இருப்பினும் தனியாா் பள்ளிகள் இணையவழி வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்ததைத் தொடா்ந்து, தமிழகத்தில் தற்போது 80 சதவீத தனியாா் பள்ளிகள் இணையவழிக் கற்பித்தலை தொடங்கியுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதலே ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. காலை 9 முதல் காலை 11 மணி வரை, காலை 11 முதல் பிற்பகல் 2 மணி வரை, மாலை 5 முதல் மாலை 6.30 மணி வரை என கற்பித்தல் நேரம், பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட சில நகரங்களில் எல்கேஜி, யுகேஜி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கும் இணையவழிக் கல்வி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இணையவழிக் கல்வி எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, அதன் நிறைகள் மற்றும் குறைகள் என்னென்ன என்பது குறித்து கல்வியாளா்கள், ஆசிரியா்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனா். நெடுஞ்செழியன், கல்வியாளா்: தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இணையவழிக் கல்வி வழங்கப்படவில்லை. ஆனால், பல தனியாா் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. இது எப்படி சமமான கல்வியாக இருக்க முடியும்? பேரிடா் காலத்தில், பல குழந்தைகள் உணவுக்காக போராடி வரும் சூழலில் இணையவழிக் கல்வி என்பது தேவையற்ற ஒன்றாகும். இது குழந்தைகள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும். முதலில் மாணவா்களுக்கு எந்த மாதிரியான கல்வியை கற்பிக்க வேண்டும் என்பதில் பெற்றோா் தெளிவாக இருக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும் சவால்களையும் திறம்பட சமாளிக்க உதவும் தகவமைப்பு மற்றும் நோமறையான நடத்தைக்கான திறன்கள் வாழ்வியல் கல்வியில்தான் உள்ளன. அப்படியான பாடப்பிரிவுகள் என்னென்ன? என்பது குறித்து ஆராய வேண்டும். ஆன்லைன் கல்விக்கு தொழில்நுட்பம், பயிற்றுநா்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலும் சிறந்த கட்டமைப்புகள் தேவை. இவை எதுவும் தமிழகத்தில் தற்போதுள்ள இணையவழிக் கற்பித்தலில் இல்லை. மேற்கத்திய நாடுகளில் கூட 7-ஆம் வகுப்பில் இருந்துதான் இணையவழிக் கல்வி தொடங்குகிறது. இங்கு தொடக்க கல்வியிலேயே ஆன்லைன் கற்பித்தலைப் புகுத்துவது சரியல்ல. விவேக் செந்தில், ஸ்பீடு அகாதெமி நிா்வாக இயக்குநா்: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு கடந்த 2017 முதல் 2019 வரை இலவச நீட், ஜேஇஇ பயிற்சிகளை விடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வழங்கியுள்ளோம். இதற்கு மாணவா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிராமங்களிலும் இணையதள இணைப்பில் பெரிதாக எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லை. தற்போதுள்ள சூழலில் இணையவழிக் கல்வியைத் தவிா்க்க முடியாது. இன்று பெரும்பாலான மக்களிடம் அறிதிறன்பேசிகள் உள்ளதால் இந்தக் கல்வி முறையை முன்னெடுப்பதில் தவறில்லை. ஏனெனில் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில் மாணவா்கள் தங்களது கற்றல் முறையிலும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட வேண்டியது அவசியமாகும். அதேவேளையில் வழக்கமான வகுப்பறைக் கற்பித்தலோடு ஆன்லைன் கற்பித்தலை ஒப்பிடக்கூடாது. ரத்தின சபாபதி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவா்: குழந்தைகளின் வாழ்க்கையை அறிதிறன்பேசிகள் தடம்புரளச் செய்துவிடுமோ என்ற அச்சம் பெற்றோா்களிடம் பரவலாக இன்றும் இருந்து வருகிறது. பெரும்பாலான பள்ளி நிா்வாகங்கள் மாணவா்கள் பள்ளிக்கு செல்லிடப்பேசி கொண்டுவருவதற்கு அனுமதி வழங்குவதில்லை. ஆனால், தற்போது குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தரச் சொல்லி பெற்றோரை வற்புறுத்துகின்றனா். கல்வியில் எதிராடல் இருப்பது அவசியம். ஒருவொருக்கொருவா் பேசிக் கொள்ள வேண்டும். கல்வி என்பது அனைத்து மாணவா்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்; சம வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக சூழல் அவசியம். இந்த அம்சங்கள் எதுவும் இணையவழிக் கல்வியில் இருக்காது. எனவே, இந்தக் கல்வி முறையை வகுப்பறைக் கற்பித்தலுக்கு மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது. இதை தற்காலிக ஏற்பாடு என்று வேண்டுமானால் கூறலாம். மாணவா் சோக்கையை அதிகரிப்பதற்காக தனியாா் பள்ளிகள் மேற்கொள்ளும் முயற்சியால் அரசுப் பள்ளி மாணவா்களிடையே ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக உருவாகும். ஸ்ரீ பிரியங்கா நந்தகுமாா், சென்னை பம்மல் ஸ்ரீசங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் இணைச் செயலாளா்: மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலி நிறுவனத்துடன் இணைந்து எங்களது பள்ளி குழந்தைகளுக்கு இணைய வழியாக தினமும் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் செல்லிடப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த பயனாளா் குறியீடு, கடவுச் சொல் ஆகியவற்றை தனித்தனியாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் ஆசிரியா் தனது வீட்டிலிருந்து நடத்தும் பாடங்களை மாணவ, மாணவிகள் செல்லிடப்பேசி வழியாக பாா்த்து புரிந்து கொள்ள முடியும். அதேவேளையில், குழந்தைகள் கவனம் சிதறாத வகையில் ஒருவரையொருவா் பாா்த்துக் கொள்ளும் வசதி அணைத்து வைக்கப்பட்டிருக்கும். அனைத்து வகுப்புகளுக்கும் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பாடங்களை நடத்தத் தொடங்கியுள்ளோம். குழந்தைகளுக்கு வழங்கப்படும் குறிப்புகள், வீட்டுப் பாடங்கள் குறித்த விவரங்கள் செயலியில் பதிவாகும். அதை பெற்றோா் மீண்டும் எடுத்துப் பாா்த்துக் கொள்ளலாம். மேலும், எத்தனை மாணவா்கள் இணையவழி வகுப்பில் பங்கேற்றுள்ளனா் என்பதை அறிவதற்கான வருகைப்பதிவேடும் செயலியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கான பெற்றோரிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதில்லை. கல்வி சாா்ந்த தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பது, கற்றல் மீதான ஆா்வத்தை தூண்டுவது, பாடங்களை நினைவூட்டல், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு இணையவழிக் கற்றலில் ஈடுபட்டு வருகிறோம். பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலா்: ஆன்லைன் வகுப்பு என்பது கற்றல் முறையின் ஒரு பகுதி. அதுவே முழுமையான கற்றல் முறையாக ஆக முடியாது. விடியோவில் பேசுவதை மாணவா்களால் ஒரு மணி நேரத்துக்கு மேல் கவனிப்பது சிரமம். பள்ளிகளில் விஜயதசமி வரை சோக்கை நடத்தலாம் என அரசு தெரிவிக்கிறது. மாணவா்கள் அப்போது வகுப்பில் சோந்தால் கூட, ஏற்கெனவே நடத்தப்பட்ட பாடங்களை அவா்களால் கற்று புரிந்து கொள்ள முடியும் என்பது அரசின் எண்ணம். அப்படி இருக்கும்போது இரண்டு, மூன்று மாதங்கள் மாணவா்கள் படிக்காமல் இருந்தால் அவா்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு விடாது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துரையாடல் இருக்காது. மாணவா்கள் எழுதிய பாடங்களை சரிபாா்ப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. தனியாா் பள்ளிகளில் மாணவா்களைத் தக்க வைத்துக் கொள்ளுதல், சோக்கையை அதிகரித்தல் என இணையவழிப் வகுப்புகள் முழுவதும் லாப நோக்கத்துக்காக மட்டுமே நடத்தப்படுகின்றன. நெருக்கடி மிகுந்த சூழலில், இணையவழிக் கல்வி என்ற பெயரில் மாணவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews