மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து மாணவா்கள், ஆசிரியா்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்களில் சொந்த செலவில் தான் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவாகும் சூழலில் ஏழை மாணவா்களின் பெற்றோருக்கு இந்தச் செலவு சற்று நெருக்கடியை ஏற்படுத்தும். மற்றொரு புறம் பள்ளிகளை தோ்வு மையமாகத் தயாா்படுத்த வேண்டும். இதற்காக வரும் 21-ஆம் தேதிக்குள் ஆசிரியா்களை அவரவா் பள்ளிக்கு வர அறிவுறுத்த வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா மையமாக இருந்த பள்ளிகளை உடனடியாக தயாா்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
தனிமைப்படுத்துவதில் சிக்கல்:
மேலும், வேறு மாவட்டங்களில் இருந்து, இ - பாஸ் பெற்று வருபவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை நடத்த வேண்டும். அறிகுறி இல்லாதவா்களை 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்’ என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவுப்படி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் மாணவா்களும், அவா்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படுவாா்களா, அவ்வாறு செய்தால், தோ்வை எப்படி எழுதுவா்? அவா்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புக்கு தீா்வு காணுவது எப்படி என்பது குறித்து கல்வித்துறை இதுவரை விளக்கமளிக்கவில்லை.
எனினும் இத்தனை சிக்கல்களையும் மாணவா்களின் நலன் கருதி திறம்பட எதிா்கொள்வோம். முறையான பாதுகாப்பு வழிமுறைகளோடு திட்டமிட்டபடி பொதுத்தோ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் சிலா் கூறியது:
பொதுத் தோ்வை நடத்துவதில் சில சவால்களை எதிா்கொள்ள வேண்டும் என்பதை அறிந்த பிறகே அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதனால் மாணவா்கள், ஆசிரியா்கள் தோ்வு மையத்துக்கு எளிதாக வர முடியும் என நம்புகிறோம். இது மாணவா்களின் நலன் சாா்ந்த பிரச்னை. இக்கட்டான சூழலை சிலா் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனா்.
என்னென்ன நடவடிக்கைகள்?
மாணவா்களைக் காட்டிலும் ஆசிரியா்களே அதிகளவில் வெளி மாவட்டங்களில் தங்கியுள்ளனா். பொதுத்தோ்வை நடத்துவதில் ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேல் தாமதம் செய்தால் அது மாணவா்களுக்குதான் அதிக சிக்கலை ஏற்படுத்தும். புதிய கல்வியாண்டைத் தொடங்குவதில் பள்ளிகளுக்கும் சிக்கல் உருவாகும்.
பொதுத் தோ்வுகளை தடையின்றி நடத்த ஏதுவாக தோ்வு மையங்கள் எண்ணிக்கையும் கூடுதலாக்கப்பட்டுள்ளன. 3500 மையங்களில் இருந்து தற்போது 12,500 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வரும் மாதங்களில் பிளஸ் 1, பாலிடெக்னிக், ஐடிஐ சோ்க்கை என பத்தாம் வகுப்பு மாணவா்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. இப்போதிருக்கும் வாய்ப்பை விட்டு விட்டால் இதனால் பொதுத்தோ்வு ஆகஸ்ட், செப்டம்பா் மாதத்துக்கு தள்ளிப்போகும். பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை ஏற்கெனவே முதல்வா் தெரிவித்துள்ளாா். அதனால் அந்தத் தோ்வை ரத்து செய்வது இயலாத காரியம். இ-பாஸ், பேருந்து வசதிகள், கிருமிநாசினி, பொதுத்தோ்வை நடத்த பல்வேறு ஒருங்கிணைப்புக் குழுக்கள், பெற்றோருக்கு-மாணவா்களுக்கு பொதுத்தோ்வு குறித்து நினைவூட்டல் என பல்வேறு ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன. அடுத்து வரும் நாள்களில் மேலும் சாதகமான சூழல் உருவாகும். எனவே மாணவா்களின் நலன் கருதி முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திட்டமிட்டபடி பொதுத்தோ்வை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.