என்.ஐ.ஓ.எஸ். என்பது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் திறந்தவெளி கல்விமுறை திட்டம். இதில் வீட்டில் இருந்தே கல்வி பயிலலாம். தினந்தோறும் பள்ளிக்கு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை. புரியாத பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, ஒரு வருடத்திற்கு சில வகுப்புகள் (அதிகபட்சமாக 15 வகுப்புகள்) மட்டுமே, அருகில் இருக்கும் பள்ளிகளில் நடத்தப்படும். அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
இதில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை. ஏதேனும் ஒரு மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் போதும். இந்த கல்வித்திட்டத்தின் வழியே 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம். 9-ம் வகுப்பு வரை படித்தவராக இருந்தாலும் சரி, மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவராக இருந்தாலும் சரி.. என்.ஐ.ஓ.எஸ். கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம்.
உங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால், ரூ.2100 கட்டணத்தை (புத்தகம் செலவு உட்பட) செலுத்த வேண்டும். அதன்பிறகு புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு வருடத்தில், ஜூலை மற்றும் செப்டம்பர் என இருமுறை அட்மிஷனும், அதற்கு தகுந்தாற்போல இருவேறு காலக்கட்டங்களில் தேர்வுகளும் நடத்தப்படும். விண்ணப்பம், தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் என அனைத்தும் இணையதளத்திலேயே கிடைப்பதால், அலைச்சல் மிச்சம்.
இதன் சிறப்பு என்ன?
இது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையானது. நமக்கு பிடித்த பாடத்தை நாமே தேர்ந்தெடுத்து படிக்கும் வசதி இந்தக் கல்வி முறையில் இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்தும், பொதுவாக அறியப்படும் 10-ம் வகுப்பு பாடங்கள். ஆனால் என்.ஐ. ஓ.எஸ். கல்வி முறையில் ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்பட்டாலும், அதை பயன்படுத்த முடியாதவர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி, எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, சமஸ்கிருதம், அரபி என நீளும் மொழிப்பாடங்களில் நமக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். அதிகபட்சமாக இரண்டு மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பும் உண்டு. அதேசமயம், கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், தொழில் படிப்புகள், வீட்டு அறிவியல், சைகாலஜி, இந்திய கலாசாரம் மற்றும் பெருமைகள், அக்கவுண்டன்சி, பெயிண்டிங், டேட்டா எண்ட்ரி செயல்பாடுகள், ஹிந்துஸ்தானி மியூசிக், கர்னாட்டிக் மியூசிக் என கல்லூரி மாணவர்களே வியந்துபோகும் வகையில் பல்சுவையான பாடத்திட்டங்கள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
12-ம் வகுப்பு பாடங்கள்
12-ம் வகுப்பில் மொழிப்பாடங்களோடு கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், பொருளாதாரம், வீட்டு அறிவியல், சோசியாலஜி, பெயிண்டிங், மாஸ் கம்யூனிகேஷன், சுற்றுலா, சட்ட படிப்பு, நூலக அறிவியல், ராணுவ வரலாறு, ராணுவ படிப்புகள், குழந்தை பராமறிப்பு... என 12-ம் வகுப்பு பாடத்திட்டமும் அசத்துகிறது. தேர்வு மற்றும் மதிப்பெண் பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடம் வகையில், ‘டியூட்டர் மார்க் அசைன்மெண்ட்' (டி.எம்.ஏ.) என்பது கொடுக்கப்படும். இதை சரிவர முடித்து, தேர்விற்கு முன் சமர்ப்பித்தால், 30 மதிப்பெண் வழங்கப்படும். எழுத்து தேர்வில் கிடைக்கும் மதிப்பெண், 70 மதிப்பெண்களுக்கு கன்வெர்ட் செய்யப்பட்டு, மொத்த மதிப்பெண் வழங்கப்படும். அதாவது ‘டி.எம்.ஏ. + எழுத்து தேர்வு = மொத்த மதிப்பெண்' என்ற அடிப்படையில் தேர்வு முடிவுகள் வரும். பெயிண்டிங் போன்ற பாடங்களுக்கு செய்முறை தேர்வுகளும் (வரைந்து காட்டுதல்) நடத்தப்படும்.
பிசியாக இருக்கும் குட்டி சினிமா பிரபலங்கள், இளம் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களே இந்த கல்வித்திட்டத்தை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் பெற்றோரின் வழிகாட்டுதலோடு, வீட்டிலேயே சுயமாக தேடி படிக்கும் ஆர்வமுடைய குழந்தைகளும் இந்த கல்வித்திட்டத்தின் கீழ் கல்வி பயிலலாம். பாடத்திணிப்பு இன்றி, விரும்பிய பாடங்களை தேர்ந்தெடுத்து படிப்பதினாலும், மனப்பாடம் குறையும். கல்வி அறிவு வளரும்.
அங்கீகாரம் உண்டா?
ரெகுலர் பள்ளியில் படித்த மாணவனுக்கு கிடைக்கும் எல்லா உயர்கல்வி வாய்ப்புகளும், என்.ஐ.ஓ.எஸ். மாணவனுக்கு கிடைக்கும். 72 நாடுகள் இந்த கல்விமுறை அங்கீகரித்துள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.