"1. கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடரால் தமிழ்நாட்டின் சில பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் சில மாதங்கள் பள்ளிகள் இயங்கவில்லை. மனிதர்கள் உண்டாக்கிக் கொண்ட சிக்கலால் தமிழ்நாட்டில் ஒரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்கள் பாடத்திட்டமே இல்லாமல் பள்ளிகள் இயங்கின. இத்தகைய வேலை நாள் இழப்பு, அதை எதிர்கொண்டு பாட வேளை ஈடு செய்யப்பட்டு பாடங்கள் முடித்து தேர்வுகள் நடத்திய அனுபவம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு.
3. இந்த உயிர் பறிக்கும் நோய்த் தொற்று அபாயம் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நோய் ஒருவரைத் தொற்றிக் கொண்டால் அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் இன்றைய நிலையில் மருத்துவர்கள் அறிவுரை.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் சத்தான உணவும், நல்ல குடிநீரும், காற்றோட்டமான வாழ்விடமும் அவசியம். இவை அனைத்தும் அனைவருக்கும் கிடைத்திடவில்லை. மேலும், மன அழுத்தம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆரோக்கியமான சூழலும் இல்லாமல் மன அழுத்தத்திற்கும் ஆளானால் அது மேலும் ஆபத்தானது.
5. நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. தினக் கூலியை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்திய நடைபாதையில் வசித்தவர்கள் மாநகராட்சி சமூகக் கூடங்களில் இன்று தங்க வைக்கப் பட்டுள்ளனர். சிறிய கொட்டகையில் வசிப்பவர்கள், சிறு வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள், இடம்பெயர்ந்து வேலை பார்த்தத் தொழிலாளர்களின் குடும்பங்கள் என்று பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அரசும், தொண்டுள்ளம் கொண்டோரும் தந்திடும் உதவியில் அரை வயிறு, கால் வயிறு நிரம்பினால் போதும் என்று வாழ்கின்றனர்.
பலவகையான பாதிப்புகளுக்கு ஆளான மாற்றுத் திறனாளிக் குழந்தைகளும் உண்டு. பேரிடர் காலத்தில் வீட்டில் அடைபட்டுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வாய்ப்பும் வசதியும் ஒரே மாதிரியாக இல்லை. அனைவரிடமும், கணினி, மடிக்கணினி, செல்பேசி வசதி இல்லை. தொலைதூர கிராமம், மலை கிராமம் இங்கெல்லாம் இணையதள வசதி பெரு நகரத்திற்கு இணையாக உண்டா? இங்கு வாழும் மக்கள் நிலை என்ன?
7. பெரு நகரில் கூட இணையதள வசதியில் பிரச்சினைகள் உள்ளன. வைஃபை இணைப்பு அனைத்து இடங்களிலும் கிடைப்பது இல்லை. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு தரும் திறன் அளவு அதற்கான தொகை இவையனைத்தும் இணையதளச் சேவையை அனைத்து மக்களும் பயன்படுத்துவதில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
8. வேலை இழப்பு, உயிர் இழப்பு, சமூக ஒடுக்குமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவை குடும்பத்திற்குக் குடும்பம் ஏதோ ஒரு சிக்கலில் மக்களைத் தவிக்கச் செய்துள்ளது. சமூக உளவியல் தனிமனித உளவியலைப் பாதிக்கிறது. இவ்வளவு சிக்கலுக்கு இடையில் உயிரைக் காப்பதே பெரும் போராட்டம் என்ற சூழலில் பாடத்தைப் படி என்பது நியாயமா? குழந்தைகளுக்குத் தேவையற்ற மன அழுத்தம் தராதா?
9. எல்லா வசதிகளையும் வைத்துக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் நபர்களை மட்டும் கருத்தில் எடுத்துச் செயல்பட நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானது.
10. ஊரடங்கு என்பது விடுமுறைக் காலம் அல்ல. சுகாதாரப் பேரிடர் காலம். நோய்த் தொற்று குறித்த அச்சமும் பதற்றமும் நிறைந்திருக்கும் சமூகச் சூழல். இத்தகையச் சூழலில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி இணையதள வகுப்பில் அமரச் செய்வது நியாயமற்ற அணுகுமுறை.
11. பத்தாம் வகுப்புத் தேர்வு, விடுபட்ட பதினோராம் வகுப்புத் தேர்வு, பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வு எழுத இயலாமல் போன மாணவர்களுக்குப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு ஆகியவை எப்போது, எவ்வாறு நடக்கும் என்ற பதற்றத்தில் பெற்றோரும் மாணவரும் இருக்கின்றனர். சிபிஎஸ்இ வாரியம் பள்ளி திறந்து 10 நாட்கள் வகுப்பு நடந்த பின்னரே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் என்று திட்டவட்டமாக தனது சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
(1). குழந்தைகளின் ஆரோக்கியம், மனநிலை ஆகியவற்றைப் பராமரிக்க / பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. ஒரு நல்வாழ்வு அரசு அனைவரின் நலன் சார்ந்துதான் முடிவுகள் மேற்கொள்ள முடியுமே தவிர வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தட்டுமே என்று சிலருக்கு மட்டுமே இருக்கக் கூடிய வாய்ப்பு, பலருக்கு இது நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தை உருவாக்கக் கூடிய எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
இணையதள வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பைத் தராது. பாகுபாடு உடையது. இருப்பவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறவும் இல்லாதவர்கள் பின் தங்கி நிற்கவும் வழிவகுக்கும். குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இணையதள வகுப்பறை கற்றலுக்கு உதவியாக இருக்கலாம். வகுப்பறைக் கற்றலுக்கு மாற்றாகக் கருத இயலாது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது வேறு. பேரிடர் காலத்தில் அதைப் பயன்படுத்தி வகுப்பு நடத்துவது / பாட வேளையாக அதைக் கருதுவது என்பது வேறு. பள்ளியில் நடைபெறும் நேரடி வகுப்புக்கு மாற்றாக இணையதள வகுப்பு நடத்தப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது.
அரசுப் பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளிகளும் இத்தகைய வகுப்பு நடத்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கட்டாயப்படுத்தி பெற்றோரை இணையதள வகுப்புக்கான கருவிகளைப் பெற்றுத் தர வற்புறுத்தக் கூடாது.
(2). வசதி உள்ள குழந்தைகள், வசதியற்ற குழந்தைகள் இருவருக்கும் சமமான கற்றல் சூழலை உருவாக்க வேண்டிய அரசு, சுகாதாரப் பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தில் கட்டாயப்படுத்தி இணையதள வகுப்பு நடத்துவது குழந்தை உரிமை மீறல். சமமற்ற கல்வியியல் நடவடிக்கையால் குழந்தைகள் எவ்வாறு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை மாநிலக் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்குத் தகுந்த அறிவுரை வழங்கிட வேண்டும்.
(3). பத்தாம் வகுப்பு தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்குத் திட்டவட்டமான பதில் இல்லாமல் பெற்றோரும் குழந்தைகளும் பதற்றத்தில் உள்ளனர். பல்வேறு சூழலில் இருந்து மீண்டும் பள்ளிக்கு வர இருக்கும் குழந்தைகளின் மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. அச்சத்திலும், பதற்றத்திலும் இருக்கும் குழந்தைகள் நேரடியாகத் தேர்வு மையத்திற்கு வரச் சொல்வது ஒரு நியாயமற்ற நடவடிக்கை.
இத்தகைய சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது என்று அரசு நிலை எடுக்குமாயின் அதற்குக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுகிறோம்:
(2). ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பதற்றம் அதிகரிப்பதை உணர வேண்டும். குறிப்பாகப் பள்ளி திறந்து பத்து வேலை நாட்கள் வகுப்பு நடந்த பிறகு பத்தாம் வகுப்புத் தேர்வு என்று மத்தியப் பாடத்திட்ட வாரியம் அறிவித்து விட்ட பிறகு தமிழ் நாடு அரசு அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது குழப்பத்திற்கும் பதற்றத்திற்கும் வழிவகுக்கும்.
எப்போது ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுகிறதோ, அவ்வாறு விலக்கிக் கொள்ளப்பட்டுப் பள்ளிகள் திறக்கப்படும்போது, குறைந்தது 15 வேலை நாட்கள் வகுப்பு நடந்த பின்பே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும். அவ்வாறு வகுப்பு நடத்தாமல் நேரடியாக தேர்வு நடத்தக் கூடாது. பதினைந்து நாட்கள் வகுப்பு நடத்தப்பட்ட பிறகே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடக்கும் என்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
(4). பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இறுதித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் பள்ளி திறந்த பின் குறைந்தது பத்து நாட்களுக்குப் பிறகு தேர்வு நடத்த வேண்டும். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வின் போது கடைசித் தேர்வு எழுத இயலாமல் போன மாணவர்களுக்கு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டபின் பள்ளிகள் திறந்து பத்து நாட்களுக்குப் பிறகே தேர்வு நடக்கும் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
(5). பதினொன்றாம் வகுப்புக்கானப் பொதுத் தேர்வில் இறுதியாக நடக்க இருந்த ஒரு தேர்வு மட்டும நடக்கவில்லை. பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் கல்லூரி சேர்க்கைக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் உள்ளிட்ட வகுப்பு நடைமுறைகள் முடிந்து மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்ட பிறகே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வகுப்பறை பங்கேற்பு, பருவ, மாதிரித் தேர்வு முடிவுகளின் சராசரி மதிப்பெண் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் அக்குறிப்பிட்டப் பாடத்திற்கானத் தேர்ச்சியைத் தீர்மானிக்கலாம்.
மாணவர் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் தேர்வு நடைமுறை குறித்த தனது முடிவினை உடனடியாக அறிவிக்க வேண்டும்". இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.