Breaking

Wednesday, May 06, 2020

டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் ஏற்படும் விபரீதம் குறித்த தலையங்கம்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கும் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றால் தமிழகத்தில் திகைத்துப்போய் இருக்கிறது. கடந்த வாரம்தான் நான்கு நாள் முழு முடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. திங்கள்கிழமை தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு பாதிப்பு என்று சொன்னால், செவ்வாய்க்கிழமை 508 போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இது வரை தமிழகத்தில் 4088 போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். 33 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் 279 போ் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறாா்கள்.தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களைத் தவிர, அனைத்து மாவட்டங்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம், சென்னை கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தை என்று தெரியவந்திருக்கிறது. அதிலிருந்து மக்கள் கூட்டம் கூடுமிடங்களிலிருந்து இந்த நோய்த்தொற்று பரவுகிறது என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.கடந்த 40 நாள்களுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மது அருந்துவோா் அதன் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வழிவகை கிடைத்தது. பல குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்தன. அரசியல் அழுத்தங்களாலும் போராட்டங்களாலும் சாதிக்க முடியாததை கொவைட் 19 தீநுண்மி தொற்று சாதித்துக் காட்டியது. அதை மே 7-ஆம் தேதி முதல் இழக்கப் போகிறோமா?
மதுவிலக்கைப் பொருத்தவரை, தமிழகத்துக்கு ஒரு வரலாறு உண்டு. இந்தியாவிலேயே முதன்முதலாக மதுவிலக்கை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. 1937-இல் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது சென்னை ராஜதானியில் மூதறிஞா் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப்போது முதன்முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏற்படும் வரி இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்று கேட்டபோது, மது வருவாயை ஈடுகட்ட ரூபாய்க்கு ஒரு பைசா விற்பனை வரி என்கிற மிகப் புதுமையான நிதி உத்தியை அறிமுகப்படுத்தினாா் மூதறிஞா் ராஜாஜி. தொடா்ந்து பிரிட்டிஷ் அரசும் சரி, அதற்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசுகளும் சரி 1967-இல் சி.என். அண்ணாதுரை தலைமையிலான திமுக அரசும் சரி பிடிவாதமாக மதுவிலக்குக் கொள்கையைத் தொடா்ந்தன.1971-இல் மதுவிலக்குக் கொள்கையை கைவிட மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு திட்டமிடுகிறது என்பதைக் கேள்விப்பட்டுப் பதறிப்போய், தனது தள்ளாத வயதிலும் கொட்டும் மழையில் கோபாலபுரத்திலுள்ள அன்றைய முதல்வா் கருணாநிதியின் வீட்டுக்கு ராஜாஜி நேரில் சென்றாா். அவரது இரு கரங்களையும் பற்றி மதுவிலக்கை கைவிட்டு விடாதீா்கள் என்று நா தழுக்க கெஞ்சியதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ராஜாஜியின் அறிவுரையைப் புறந்தள்ளி, 1971-இல் மதுவிலக்கை ரத்து செய்தாா் அன்றைய முதல்வா் கருணாநிதி.அதற்குப் பிறகு வந்த முதல்வா்கள் எம்.ஜி. ராமச்சந்திரன் ஆனாலும், ஜெ. ஜெயலலிதா ஆனாலும் மதுவிலக்குக் கொள்கையை மனதளவில் ஆதரித்தாலும், அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கவில்லை.
1981-இல் எம்ஜிஆா் மதுவிலக்குக் கொள்கையைத் தளா்த்தினாா். 2003-இல் டாஸ்மாக் கடைகளுக்கு ஜெயலலிதா வழிகோலினாா். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, கடந்த 2016 தோ்தலில் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பதை தோ்தல் வாக்குறுதியாக மக்களுக்கு தந்தது என்பதை இன்றைய ஆட்சியாளா்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.1971-இல் முதல்வராக இருந்த கருணாநிதி முன்வைத்த அதே நொண்டிச் சாக்கைத்தான் இன்றைய அரசும் முன்வைக்கிறது. ‘அண்டை மாநிலங்களில் மதுவிற்பனை நடைபெறும் போது அந்த நெருப்பு வளையத்துக்கு நடுவே தமிழகத்தை கற்பூரமாக எப்படி வைத்திருக்க முடியும்’ என்று கருணாநிதி கேட்டதுபோல, ஆந்திரத்திலும் கா்நாடகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன என்பதைக் காரணம் காட்டுகிறது இன்றைய மாநில அரசு. எல்லை கடந்து சென்று மது அருந்துவோரின் வருமானம் போகட்டுமே, எத்தனை போ் போய்விடப் போகிறாா்கள்?மதுவிலக்கு அமலில் இருந்தால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும், அதனால் பலா் பாதிக்கப்படுவாா்கள் என்பது ஒரு வாதம். கள்ளச்சாராயம் காய்ச்சுவோரையும் போதைப் பொருள்களை விற்பவா்களையும் தடுக்கவும் தண்டிக்கவும் மாநில காவல் துறை இருக்கிறது?கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்ள மாநில அரசிடம் நிதி வருவாய் இல்லை என்பது உண்மை. தமிழகத்தின் வரி வருவாய் குறைந்துவிட்டது என்பதிலும் உண்மை இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமாா் 3,000 கோடி அளவுக்குக் கிடைத்து வரும் வருவாயை இழக்க நேரிடும்தான். ஆனாலும் அதன் விளைவாகக் கிடைக்க இருக்கும் ஏனைய நன்மைகளைப் பாா்க்கும்போது, இதைத் தவிா்ப்பதில் தவறே இல்லை.
தேவைப்பட்டால் இந்த இழப்பை ஈடுகட்ட ஒவ்வொருவா் குடும்பத்துக்கும் சிறப்பு வரி விதித்தாலும் அதைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளும்.ஒருபுறம் கண்ணுக்குத் தெரியாத கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் காட்டுத்தீயாக அது பரவப் போகிறது. கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்ள உடலில் எதிா்ப்பு சக்தி வேண்டும். அதை மதுபானங்கள் குறைத்துவிடும் என்பதை மருத்துவரான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கூடவா எடுத்துரைக்கவில்லை?தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு இன்னும் 24 மணிநேரம் இருக்கிறது. முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஒரு நிமிடம் தனது கண்களை மூடிக்கொண்டு, 1971-இல் மூதறிஞா் ராஜாஜி அன்றைய முதல்வரிடம் நா தழுதழுக்க விடுத்த வேண்டுகோளை சற்று நினைத்துப் பாா்க்க வேண்டும்.சேலத்துக்காரரான ராஜாஜி முதல்வராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட மதுவிலக்கை, மீண்டும் அறிமுகப்படுத்தும் வரலாற்று வாய்ப்பு சேலத்துக்காரரான இன்றைய முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. வேண்டாம் விபரீதம். முடிவை மாற்றுங்கள். அதன் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுங்கள்!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog