கரோனா நோய் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் மிகப் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதும் இந்தியா அதற்கு விதிவிலக்கல்ல என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவின் காரணமாக விளிம்புநிலை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இன்றித் தவிக்கின்றனர். பல தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு போன்ற கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவற்றை மீட்டெடுக்கவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலையை பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியைக் காட்டியது போல் உள்ளது.
கார்ப்பரேட்டுகளின் பிரதம காவலர்
கரோனா நோய் தொற்றின் காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார அறிஞர் அமெர்த்தியா சென் ஆகியோர் சொன்ன அனைத்து ஆலோசனைகளையும் தூக்கியெறிந்து விட்டு கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று சொன்ன பிரதமர் தன்னுடைய எந்த உரையிலும் ஏழை மற்றும் தினக்கூலிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பதிலிருந்து மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பதையும் ஏழைகளுக்கான அரசு அல்ல என்பதையும் இன்னொரு முறை பறைசாற்றியிருக்கிறது இவ்வுலகிற்கு.
வங்கிக் கணிதமோ, பொருளாதாரப் பாடமோ படிக்காத தற்போதைய நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் ஏழை எளிய மக்களின் மீதான தங்கள் அக்கறையை எப்படிக் காட்டினார்கள் என்பதை அவர்கள் வெளியிட்ட நிவாரணங்களைக் கண்டு நாடே அதிர்ந்து போனது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, விவசாயிகளுக்கான ரூ.6000/-நிவாரணத் தொகையிலிருந்து ரூ.2,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தொழிலாளர் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைத்திருக்கும் தொகையில் 75 சதவீதம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பும், வங்கிகளில் மாதாந்திர தவணைத் தொகை செலுத்துபவர்கள் தங்கள் தவணையை 3 மாதங்கள் கழித்து செலுத்தலாம் என்றும் அறிவிப்பு வெளியானது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு தினக்கூலியில் ரூ.20/-ஐ உயர்த்திப் வழங்கப்படும் என்ற சலுகையும் அனைத்து சிறு, குறு ஏழை விவசாயிகளையும், தொழிலாளர்களையும், உழைப்பாளி மக்களையும் எந்தவகையிலும் காப்பாற்றி கரை சேர்க்காது என்று சொல்லுமளவுக்கு அவர்கள் ஊடக அறிக்கைகள் இருந்தன. இவற்றையெல்லாம் மொத்தமாக கூட்டிப்பெருக்கி சில லட்சம் கோடிகள் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு மக்களுக்குச் செலவிடும் தொகையாக கணக்கிட்டு காட்டி நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் வெற்று அறிக்கை வெளியிட்டுக் காட்டினார்கள்.
மீறப்படும் அதிகாரப் போக்கின் வரம்புகள்
முறையாக அரசுக்கு வருமான வரியைச் செலுத்திவரும் மத்திய மாநில அரசு ஊழியர்களின் பணம் இருக்கும்போது, தேவைப்படும் நேரங்களில் அவர்களுடைய ஊதியத்திலிருந்து பிடித்துக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள் என்ற அதிகாரப் போக்குதான் மத்திய அமைச்சகத்தில் காணப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் 12 நாள் சம்பளத்தை மாதந்தோறும் ஒருநாள் வீதம் பிடித்துக் கொள்ளப்போவதாக அறிவிப்பு செய்ததும், தற்போது அகவிலைப்படியை 18 மாதங்களுக்கு இல்லாததாக்கியிருப்பதும் அதன் வெளிப்பாடுகளே. இந்த நிலை தொடருமானால் திடீரென்று அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து சில சதவீத ஊதியத்தையும், சரண் விடுப்பு, ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுகால பணப்பலன்களை கூச்சநாச்சமில்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகாரத்தை பிரதமரும் நிதியமைச்சரும் ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பது அவர்கள் சொல்லாமலேயே அரசு ஊழியர்கள் புரிந்துகொள்ளக்கூடிய கருத்தாக இப்போது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பணம் கொடுக்க பெரிய மனது மத்திய அரசுக்கு இருந்தாலும் கஜானாவில் பணமில்லை என்றால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். பாவம் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடனுக்காக ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடிரூபாயை கொடுத்திருக்கிறது மத்திய அரசு. இல்லாவிட்டால் கார்ப்பரேட்டுகள் நடுத்தெருவுக்கு வந்திருப்பார்கள். பசியை விட கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து ஆரம்பிக்காத அம்பானி பல்கலைக்கழகத்திற்கு 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிற மத்திய அரசின் பெருந்தன்மை யாருக்காவது புரிகிறதா? குறிப்பிட்ட காலத்தில் புனே நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை அனில் அம்பானி முடிக்கவில்லை என்பதற்காக ஒப்பந்தத்தை முறித்துவிடவில்லை. மாறாக அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ஐந்து முறை காலநீட்டிப்பும், காலம் கடந்து வேலையை முடித்ததற்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக எப்படியும் ஒப்பந்தப் பணியை முடித்துவிட வேண்டும் என்ற அவரின் விடாமுயற்சியை பாராட்டும் விதமாக சிறப்பு நிதி கடனாக ரூ.260 கோடியும் மத்திய அரசு வழங்கி ஊக்கப்படுத்தியதை பாராட்டாவிட்டாலும் குறைந்த பட்சம் யாரும் குறை சொல்லாமலாவது இருக்கலாம் அல்லவா? நாட்டின் ஒப்புயர்வற்ற தலைவர் படேல் சிலைக்கு ரூ.3000 கோடி செலவிட்டதன் மூலம் இந்தியா ஏழை நாடல்ல என்று உலக நாடுகளுக்கு உணர்த்தியதை எதிர்க்கட்சிகள்தான் பாராட்டவில்லை என்றாலும் மக்கள் பாராட்டியிருக்க வேண்டாமா? குஜராத் புல்லட் ரயிலுக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கினால் பாரபட்சம் என்கிறார்கள், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கினால் ஆடம்பரச் செலவு என்கிறார்கள்.
அகவிலைப்படி மறுப்பும், அரசு ஊழியர் எதிர்ப்பும்
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் பெரும் பணக்காரர்களுக்கு விசுவாசம் காட்டி அவர்களுக்கு வரிச்சலுகைகளும் கடன் தள்ளுபடிகளும் செய்ததன் காரணமாக விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியை அதனால் ஏற்பட்டிருக்கும் பணப்புழக்கத்தை இந்த அகவிலைப்படியைக் கொண்டுதான் அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சமாளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு பணப்புழக்கத்தையும் குறைத்துவிடும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள் என்ற போர்வையில் இந்திய அரசின் வரிச்சலுகை மற்றும் கடன் தள்ளுபடிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகப் பெரும் பணக்காரர்களை விட்டுவிட்டு சாமானிய, மாத ஊதியம் பெறும் ஊழியர்களின் குரல் வளையை நெருக்கியிருக்கிறது மத்திய அரசு.
ஒடிசா மாநிலத்தின் முதல்வர் தன் மாநில அரசு ஊழியர்களுக்கான நான்கு மாத உதியத்தை முன்கூட்டியே வழங்கி அவர்கள் கரோனா நடவடிக்கையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உத்வேகமும் உற்சாகமும் அளித்துள்ளது. கேரளா முதல் தன்னுடைய மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 30 சதவீதம் தொகையை நான்கு மாதங்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுத்துக் கொள்வதாகவும் இந்தப் பணம் அரசு ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் நான்கு மாதங்களுக்குப் பிறகு திருப்பி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய அரசு இந்த அகவிலைப்படி பிடித்தம் செய்ய வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழநாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நிதிதிரட்ட மத்திய அரசுக்கு பல வழிகள் உள்ளன. அதை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் 1,000 கோடி ரூபாய்களுக்கு மேல் சொத்துகள் வைத்துள்ள நபர்கள் சுமார் 1,000 பேர் உள்ளனர். அவர்களிடம் ஒரே ஒரு முறை மட்டும் 2 சதவீத தொகையை கூடுதல் வரியாக வசூலித்தாலே அரசுக்கு ரூ.20,000 கோடி கிடைத்துவிடும் நிலையில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகையானது 18 மாதங்களுக்கும் சேர்த்து சுமார் ரூ.8,000 கோடி மட்டும்தான் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
எனவே கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்களின் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற்று அதன்மூலம் அரசு ஊழியர்கள் அனைவரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உத்வேகத்துடன் செய்ய ஊக்கப்படுத்துமாறு பாரதப் பிரதமரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கனிவுடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.